சிறப்புக் களம்

‘மாவட்டம் விட்டு மாவட்டம், கடும் வெயில்’ - காவல்துறைக்கே டஃப் கொடுக்கும் மதுகுடிப்போர்

‘மாவட்டம் விட்டு மாவட்டம், கடும் வெயில்’ - காவல்துறைக்கே டஃப் கொடுக்கும் மதுகுடிப்போர்

kaleelrahman

தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மது வாங்க ஏராளமான மது குடிப்போர் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதனால் மதுபான கடை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து கொரோனா குறையத் தொடங்கியதை அடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சலூன் கடைகள், டீக்கடைகள், மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டன, இதையடுத்து காலை முதலே கடைகள் முன்பு குவிந்த மது குடிப்போர் தங்களுக்குத் தேவையான மதுபானங்களை வாங்கிச் சென்றனர். அங்கு நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.

திண்டுக்கல்:

நாகல்நகர் பகுதியில் மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளன. இந்த மூன்று கடைகளிலும் மதுபானங்கள் இருப்பு இல்லாத நிலையில், ஒரே ஒரு கடைக்கு மட்டும் மதுபான குடோனில் இருந்து மினி சரக்கு லாரி மூலம் மதுபானம் கொண்டு வரப்பட்டது. இதை பார்த்த மது குடிப்போர் அந்த கடை முன்பு குவிந்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் கூட்டத்தை கலைத்து வரிசையாக மது பிரியர்களை நிற்க வைத்து அவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது. மதுபானம் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

தருமபுரி:

ஊரடங்கு தளர்வுகளால் தருமபுரி மாவட்டத்திலுள்ள 68 அரசு டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மதுக்கடைகள் திறக்கப்படாததால் தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் அருகே உள்ள பாளையம் புதூர் அரசு மதுபானக் கடையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓமலூர், தீவட்டிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மது குடிப்போர் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் மூலம் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

கோவை:

திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் மதுபான கடை திறக்காததால் திருப்பூர் திண்டுக்கல் மாவட்டம் எல்லையாக உள்ள மடத்துக்குளத்தை நோக்கி மது குடிப்போர்  படையெடுத்துள்ளனர். இதனால் சாமிநாதம்புரம் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மடத்துக்குளம், கடத்தூர், குமரலிங்கம் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு மதுவாங்க குவிந்தனர். போலீசார் இவர்களை தடுப்பதற்காக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட எஸ்பி. சசாங் சாய் நேரில் சென்று போலீசாரை துரிதப் படுத்தினார்.

திண்டுக்கல் எல்லை:

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தாராபுரத்தில் திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதி வருவதால் மது வாங்குவதற்காக மதுப் பிரியர்கள் திண்டுக்கல் எல்லை பகுதிகளில் மது வாங்குவதற்காக குவிந்தனர். இதில், தாசநாயக்கன்பட்டி, எரகம்பட்டி, உள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் வாகன சோதனை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் தாசநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் மது வாங்கிட்டு வந்த இரு கார்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து 30-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

கமுதி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக் கடைகளில் கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாகவோ அல்லது மது குடிப்போரின் கையில் பணப்புழக்கம் இல்லாததன் காரணமாகவே அரசு டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

விருதுநகர் மாவட்டம்:

அருப்புக்கோட்டையில் இன்று காலை 10 மணிக்கு மதுபானக்கடை திறந்தவுடன் முதல் ஆளாக மது வாங்கிக் குடித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வரிசையில் நின்றிருந்த மது குடிப்போருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்த விலை மது பாட்டில்கள் இல்லை என்றும் 200 ரூபாய்க்கும் அதிகமான விலை உயர்ந்த மதுபானங்கள் மட்டுமே இருப்பதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மது குடிப்போர் ஏராளமானோர் மது வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குறைந்த அளவிலான நபர்களே இருந்ததால் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் கூட இல்லாமல் எளிதாக மது வாங்கிச் சென்றனர். அவ்வாறு வாங்கிச் செல்லும் நபர்களும் மதுபாட்டில்களின் விலையை விட அதிக விலைக்கு விற்பதாக புகார் தெரிவித்தனர்.

சென்னை:

கொரட்டூரில் உள்ள மதுபானக்கடை திறக்கப்பட்ட பின்பு போதிய சமூக இடைவெளி இன்றி மது குடிப்போர் மது வாங்க முண்டியடித்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் தமிழ்நாடு மது குடிப்போர் நல சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் செல்லபாண்டியன் ஆறுமுகம் ஆகியோர் மதுபானம் வாங்க வந்த மது பிரியர்களுக்கு இறந்தவரின் இறுதிநாள் சடங்கின்போது அளிப்பதை போன்று அரிசி மற்றும் பால் வழங்கினர். பின்னர் மதுக்கடையை திறந்தவுடன் மதுபானத்திற்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் வணங்கினார்.