மனிதர்களின் வசதிக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதால், பல விலங்கினங்கள் பூமியிலிருந்து மறைந்துவிட்டன. அப்படியொரு ஆபத்தில் இருக்கிறது ஆப்பிரிக்க யானை இனம்.
ஆப்பிரிக்க யானைகள் உலகில் அழிந்து வரும் விலங்குகளில் ஒன்று. சகாரா பாலைவனத்துக்குத் தெற்கேயுள்ள கேமரூன், கபோன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இவ்வகை யானைகள் வசிக்கின்றன. இவற்றில் ஆப்பிரிக்க புதர் யானை, ஆப்பிரிக்க காட்டு யானை என இருபிரிவுகள் உள்ளன. ஆப்பிரிக்க புதர் யானைதான் தரையில் வாழும் விலங்குகளிலேயே மிகப் பெரியது. மற்றொரு இனமான ஆப்பிரிக்க காட்டு யானை தரையில் வாழும் 3-வது பெரிய விலங்கினமாகும்.
4 மீட்டர் உயரமும் 7 டன் எடையும் கொண்ட ஆப்பிரிக்க புதர் யானைகள் ஆசிய யானைகளில் இருந்து பல வகையிலும் வேறுபட்டவை. ஆப்பிரிக்க புதர் யானைகளின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2 மீட்டர் அகலமும் வளரக்கூடியவை. ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலவும் வெப்பத்தைத் தாங்குவதற்காக இந்த வகைக் காதுகள் பயன்படுகின்றன. ஆசிய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் யானை இரண்டுக்கும் தந்தங்கள் வளர்ச்சியடைகின்றன. வாழ்நாள் முழுவதும் தந்தங்கள் வளர்ச்சியடைந்து கொண்டேஇருப்பதால், வயதான யானைகள் மிக நீண்ட தந்தங்களைக் கொண்டிருக்கும்.
அளவில் மிகப் பெரிதான ஆப்பிரிக்க புதர் யானைகளுக்கு செரிமானத் திறன் மிகக் குறைவு. ஒரு நாளுக்கு 450 கிலோ எடை உணவை உள்கொள்ளும் இந்த யானைகளால் 40 சதவீத உணவை மட்டுமே செரிக்க முடியும். தரையில் வாழும் உயிரினங்களில் அதிக எடையில் மூளையைக் கொண்டிருக்கும் விலங்கும் ஆப்பிரிக்கப் புதர் யானைகள்தான். இந்த யானைகளின் மூளையின் எடை 5 கிலோவுக்கும் அதிகம். மனிதர்கள், டால்பின்கள் போல புத்திசாலித்தனம் அதிகமான உயிரினங்களின் வரிசையில் ஆப்பிரிக்க யானைகளும் பட்டியலிப்படுகின்றன. கவலை, மகிழ்ச்சி, சிரிப்பு, கற்றல், ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, சுயஉணர்வு, நினைவுதிறன் போன்ற பலவகைக் குணாதிசயங்களை ஆப்பிரிக்க யானைகள் பெற்றிருக்கின்றன. மொழியைக் கற்கும் அறிவுகூட இந்த யானைகளுக்கு உண்டு என்று கூறப்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த யானைகள், அவற்றின் தந்தங்களுக்காக நீண்ட காலமாகவே வேட்டையாடப்பட்டு வருகின்றன. 1990-ம் ஆண்டில் தந்தங்களின் விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்படுவதற்கு முன்பு, 10 ஆண்டுகளில் 7 லட்சம் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டன. கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி 2 ஆயிரத்துக்கும் குறைவான ஆப்பிரிக்க புதர் யானைகளே உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதே நிலை நீடித்தால், இன்னும் இருபது ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளே இல்லாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. வனப் பகுதிகள் அழிக்கப்படுவது, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக அழிந்துவரும் ஆப்பிரிக்க யானைகளைக் காப்பாற்றுவதற்காக சட்டங்கள் மூலமாகவும், பிரசாரங்கள் வாயிலாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.