சிறப்புக் களம்

இந்தியாவில் நீதிபதியாகும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்... சவுரப் கிர்பால் பின்புலம் என்ன?

இந்தியாவில் நீதிபதியாகும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்... சவுரப் கிர்பால் பின்புலம் என்ன?

PT WEB

தன்பாலின ஈர்ப்பாளரும், எல்.ஜி.பி.டி செயற்பாட்டாளருமான சவுரப் கிர்பால், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ளார் என்பது இந்திய நீதித்துறையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சவுரப் கிர்பால். 2017-ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இவரை கொலீஜியம் ஒருமனதாக பரிந்துரை செய்தது. ஆனால், அவரின் நியமனம் தாமதம் ஆனது. தாமதத்துக்கு அவர் தொடர்பாக எழுந்த சர்ச்சைதான். சவுரப் கிர்பால் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று பேசப்பட்டது. அவர் சில காலத்துக்கு முன் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியதை தொடர்ந்து இந்தப் பேச்சு எழுந்தது. பின்னர் ஒரு நேர்காணலில் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை உறுதி செய்த கிர்பால், கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் நண்பருடன் வாழ்ந்து வருவதாக அறிவித்தார்.

மேலும், தனது இந்தப் பாலியல் விருப்பத் தன்மையால்தான் தான் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்றும் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசினார். இப்போது பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக கிர்பாலை நியமிப்பதற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் இந்தியாவில் முதன்முதலாக நீதிபதியாகப் பதவியேற்பது இதுவே முதல் முறை என்ற கவனிக்கத்தக்க சரித்திரம் நிகழ்கிறது. இவர், எல்.ஜி.பி.டி (Lesbian, Gay, Bisexual, and Transgender - LGBT) செயற்பாட்டளராக அறியப்படும் மிக முக்கிய வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தில் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சவுரப் கிர்பால்?

டெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற சவுரப் கிர்பால், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்திருக்கிறார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சிறிது காலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிர்பால், அந்தப் பணிக்கு பின்புதான் இந்தியா திரும்பியிருக்கிறார்.

தற்போது 49 வயதாகும் கிர்பால் நீதித்துறையை தேர்ந்தெடுக்க அவரின் தந்தையே முக்கியக் காரணம். ஆம், 2002 மே முதல் நவம்பர் வரை இந்தியாவின் 31-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பூபிந்தர் நாத் கிர்பாலின் மகனே சவுரப் கிர்பால். தந்தையின் அடிச்சுவற்றை பின்பற்றி நீதித்துறையில் நுழைந்த சவுரப் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக, தன்பாலின ஈர்ப்பாளர் தொடர்பான வழக்கை ஏற்று நடத்தியது சவுரப்தான்.

மேலும், `பாலியல் மற்றும் உச்ச நீதிமன்றம்: சட்டம் இந்திய குடிமகனின் கண்ணியத்தை எவ்வாறு நிலைநிறுத்துகிறது' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பையும் எழுதியிருக்கிறார் சவுரப். டெல்லியை தளமாகக் கொண்ட தன்னார்வ நிறுவனமான நாஸ் அறக்கட்டளையின் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். தன்பாலின ஈர்ப்புறவை எதிர்த்த 377-வது சட்டப்பிரிவை நீக்க இந்த அறக்கட்டளை பெரிய போராட்டங்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு