”மத்திய அரசு மாநிலத்தை பிரிப்பது போன்ற நிலைப்பாடு எடுத்தால்தான் எங்கள் கட்சியின் கருத்தை தெரிவிக்க முடியும். முதலில் திருமணமே நடக்கவில்லை. திருமணம் நடக்கட்டும் மத்த விஷயங்களை அப்புறம் பார்த்துக்கலாம்” என்று கூலாக பேசுகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்காதது, கொங்கு நாடு சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஜெயக்குமாரிடம் முன்வைத்தோம்,
பாஜகவின் ‘கொங்கு நாடு’ கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
”கொங்கு நாடு கோரிக்கை ஒரு சென்சிட்டிவான விஷயம். மாநிலங்களைப் பிரித்து தனி மாநிலமாக உருவாக்குவது கொள்கை சம்மந்தப்பட்டது. ஒரு மாநிலத்தை பிரிக்கும் விஷயத்தில் கட்சிதான் பதில் சொல்லவேண்டும். அதனால், என்னுடைய கருத்தை தனியாக சொல்வதற்கில்லை. வானதி சீனிவாசன் தனிப்பட்ட முறையில் கொங்கு நாடு கேட்டார்களா? கட்சி ரீதியாக கேட்டார்களா? என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். அப்படித்தன் இதையும் பார்க்கிறேன். ஆனால், கொங்கு நாடு வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பது அவரவர் கருத்து சுதந்திரம். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் யார் வேண்டுமென்றாலும் கருத்து போடலாம். கருத்து போடுவதாலேயே நாங்கள் பதில் சொல்ல முடியாது”.
பாஜக கொங்கு மண்டலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதே?
“பொதுவாகவே மண்டலங்கள் எல்லாமே ஒன்றுதான். ஆனால், கொங்கு மண்டலத்திற்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பது நல்ல விஷயம்தான்”.
தொடர்ச்சியாக சசிகலா ஆடியோ வெளியாகிக்கொண்டே இருக்கிறதே?
“சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று அனைத்து தலைவர்களும் தெளிவுப்படுத்திட்டோம். சசிகலா ஆடியோவால் ஒரு தாக்கமும் ஏற்படாது. அமமுகவில் இருந்து, பலர் அதிமுகவில் இணைகிறார்கள். முதலில் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களையே தடுத்து நிறுத்த முடியாத சசிகலாவால், எங்கள் கட்சியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? திமுகவில் சேர்ந்த பழனியப்பனை தடுத்து நிறுத்த முடிந்ததா? சசிகலா தலைவராக உருவெடுக்க வாய்ப்பே இல்லை. அவங்களுக்கு மக்கள் ஆதரவும் இல்லை. கட்சியினர் ஆதரவும் இல்லை. எத்தனைப் பேர்கிட்ட வேணாலும் பேசட்டும். ஆனால், ஒன்னரை கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கட்சியில் இருக்கும் ஒருசில தொண்டர்கள் பேசினால், உடனே அவங்கப் பக்கம் எல்லோரும் போய்டுவாங்களா? கட்சியை எந்த நிலையிலும் யாரும் கைப்பற்ற முடியாது”.
எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்கிறாரே சசிகலா?
“அதெல்லாம் ஆயிரம் சொல்லலாம். நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டே இருப்பது எடுபடாத கருத்து. அம்மா மறைவுக்குப்பிறகு எடப்பாடி பழனிசாமிதான் கட்சியைக் காப்பாற்றினார். வலுவான எதிர்கட்சியாய் உருவெடுத்திருக்கிறோம். பழைய கதையைப் பேசி ஒரு புரயோஜனமும் இல்லை. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயத்தை தேட நினைக்கிறார் சசிகலா. ஆனால், எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது”.
சரி... சிறையில் இருந்து வந்தபிறகு சசிகலா உங்களிடம் பேசினார்களா?
”உங்கக்கிட்டக்கூட சசிகலா பேசுவாங்களேத் தவிர, என்னிடம் பேசமாட்டார். இதுவரை பேசவுமில்லை”.
புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு பாஜக இடம் கொடுக்கவில்லையே?
“மத்திய அமைச்சரவையில் பங்குபெற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. பிறகு எப்படி கொடுப்பார்கள்?. எங்களுக்கு கொடுக்கவில்லை என்று சும்மா வதந்தி பரப்புகிறார்கள்”.
20 ஆண்டுகளுக்குப்பிறகு அதிமுகவால்தான் பாஜக தமிழகத்தில் நான்கு இடங்களைப் பிடித்திருக்கிறது. அப்படி, இருக்கையில் அமைச்சர் பதவி கொடுத்திருக்கலாமே?
“நாங்கள் எதையும் கேட்கவில்லை. கேட்டாத்தானே? அதிமுக பாஜக கூட்டணி நல்லா போய்ட்டிருக்கு. எங்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கும் எண்ணமே இல்லை. அதனால், இந்தக் கேள்வியே எழாது. நாங்கள் கேட்காததால் அவர்களும் அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை”.
ஆனால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பிக்கு அமைச்சர் பதவி கேட்டதாக சொல்லப்படுகிறதே?
“அதெல்லாம் சும்மா வீண் வதந்தி.”
இப்போதெல்லாம் ஓபிஎஸ் தனித்தே அறிக்கை விடுகிறாரே?
“இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. பல சந்தர்ப்பங்களில் கூட்டறிக்கையும் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் இபிஸுக்கு மோதல் என்று ஊடகங்கள்தான் பெரிதுப்படுத்துகின்றன. உண்மையில் எந்த பிரச்சனையும் கிடையாது. ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்துகிறார்கள்.
அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறாரே?
”ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். பாஜகவுக்கு அண்ணாமலையை தலைவராக நியமித்தால் கட்சி வளரும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்திருக்கிறது. நியமித்திருக்கிறார்கள்”.
அமைச்சராக இருக்கும்போது சுறுசுறுப்பாக வலம் வந்தீர்களே. இப்போது, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
“அதிமுக எவ்ளோ பெரிய கட்சி. எவ்ளோ வேலை இருக்கும்? முன்பைவிட இப்போதுதான் பணி அதிகமாக இருக்கிறது. கட்சிக்காரர்களின் கோரிக்கைகளை கேட்கிறேன். தினமும் மக்களை சந்திக்கிறேன். அவர்களின், நல்லது, கெட்டதில் கலந்துகொள்கிறேன். முக்கியமாக, ஆளும்கட்சியின் மக்கள் விரோத செயல்களை அதிகமாக படிக்கிறேன். இப்பதான் ரொம்ப வேகமா டபுள் மடங்கு வேலை செய்றேன்”.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், உங்கள் தோல்விக்கு என்ன காரணம்?
“என் தொகுதியில் மக்களுக்கு நிறைய செய்துள்ளேன். இன்றைக்கும் என்மீது பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், திமுகவுக்கு ஓட்டுப்போட்டா 1000 ரூபாய் கொடுப்பாங்க. டீசல் விலை 5 ரூபாய் வரை குறையும், ஆயிரம் ரூபாயில் இருந்த முதியோர் உதவித்தொகை 1500 ரூபாய்யாகக் கிடைக்கும். கல்விக்கடன் ரத்து பண்ணிடுவாங்க என்றெல்லாம் நினைத்து என்னை தொகுதி மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். திமுகவும் அதிகமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஜெயித்துவிட்டது. பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறோம் என்றார்கள்.
ஆனால், திமுக தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை செய்யுமா என்பது கேள்விக்குறியே. அப்படி, செய்தால் உலக அதிசயம்தான். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் கண்டிப்பாக போராட்டம் செய்வோம். பார்த்துக்கொண்டே இருங்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குப்பிறகு எல்லா விலையையும் திமுக ஏற்றிவிடும். பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி விடுவார்கள். வாக்களித்த மக்கள்தான் ஏமாறப்போகிறார்கள்”.