சிறப்புக் களம்

”பிடிக்கலைன்னா விலகிடணும்... கமல்ஹாசன் கேரக்டரை ஆராயக்கூடாது!” - ஸ்ரீப்ரியா சிறப்பு பேட்டி

”பிடிக்கலைன்னா விலகிடணும்... கமல்ஹாசன் கேரக்டரை ஆராயக்கூடாது!” - ஸ்ரீப்ரியா சிறப்பு பேட்டி

sharpana

”ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் புத்திசாலி என்பது அவரை பிடித்தவர்கள்; பிடிக்காதவர்கள் என அனைவருக்குமே தெரியும். அவர், அடுத்தவர் பேச்சை கேட்கமாட்டார். யாராவது யாரைப் பற்றியாவது குற்றச்சாட்டுகள் சொன்னவுடனேயே எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கமாட்டார். நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கூர்ந்து கவனித்துதான் முடிவெடுப்பார். அதனால், இன்னொருவர் பேச்சைக் கேட்டு அவர் ஆடிவிட்டார் என்பது அவரை அவமதிப்பதற்கு சமம்” என்று அதிரடியாக பேசுகிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தோல்விக்குப் பிறகு, அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், "கட்சியில் ஜனநாயம் இல்லை. கமல்ஹாசன் மாறிவிட்டார்" என்று அதிரடியான பல குற்றச்சாட்டுக்களைக் கூறி கட்சியிலிருந்து விலகினார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைமைப் பேச்சாளரும், கட்சியின் முகங்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவருமான நடிகை ஸ்ரீப்ரியாவிடம் உரையாடியதிலிருந்து...

பல குற்றச்சாட்டுகளைக் கூறி டாக்டர் மகேந்திரன் கட்சியை விட்டு விலகியிருக்கிறாரே?

  “அவரின் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால், அவரை எங்கள் கட்சியில் எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று ஒரு சர்வே எடுத்துப் பார்த்தால் அவரின் குற்றசாட்டுகள் நியாயமானதா, இல்லையா என்பது உங்களுக்கே தெரியும்.”

’கட்சியில் ஜனநாயகம் இல்லை… கமல்ஹாசன் மேடையில் தனியாக அமர்கிறார்’ என்றெல்லாம் விமர்சித்திருக்கிறாரே?

”கட்சியிலுள்ள மற்ற உறுப்பினர்களைக் கேட்டுப் பாருங்கள். ஜனநாயகம்  இருக்கா? இல்லையா?  தலைவர் கமல்ஹாசனை எத்தனைப் பேருக்கு பிடிக்கும் என்பதெல்லாம் தெரிந்துவிடும். ”எனக்காக கட்சியில்  இணைந்த மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்கள், விஞ்ஞானிகள் என பல துறையினர் இருக்கிறார்கள்.  அனைவரும் ஒன்றாக சமமாக இருக்கவேண்டும். சிலரை மட்டும் மேடையில் அமரவைத்தால் அது தவறாகிவிடும். அதனால், பேசுபவர்கள் மட்டும் மேடைக்கு வரட்டும்” என்று கூறிவிட்டு மேடையில் தலைவர் கமல்ஹாசன் மட்டும் அமர்ந்தார். இதில், எங்கு சர்வாதிகாரம் இருக்கிறது? அனைவரையும் சமமாகப் பார்ப்பது தவறான விஷயமா?  கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட எங்கள் அனைவருக்கும் உரிமை கொடுத்திருக்கிறார் தலைவர் கமல்ஹாசன்.”

தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த சுரேஷ் அய்யரின் பேச்சைக் கேட்டே கமல்ஹாசன் நடந்துகொள்வதாக கூறியிருக்கிறாரே?  

”அடுத்தவரின் பேச்சைக் கேட்டு நடந்துகொள்பவர், தலைவர் கமல் கிடையாது. அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்வார். ஆனால், இறுதி முடிவை அவர்தான் எடுப்பார். அதனால், டாக்டர் மகேந்திரன் சொல்லும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவை அனைத்தும் அர்த்தமற்றவை. மாறணும் என்ற அவசியம் தலைவருக்கு கமலுக்கு கிடையாது.  என்னவாக இருக்கிறாரோ அப்படியே இருப்பதால்தான் தற்போதுவரை இணைந்து பணியாற்றுகிறோம். தலைவர் கமல் வேறு மாதிரி இருந்தால் கட்டாயம் நான் இணைந்து பணியாற்றி இருக்கமாட்டேன். எனக்கு அவரை 48 வருடங்களாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னையா துணைத் தலைவராக்கினார்? நன்கு படித்தவர் அந்த இடத்தில் இருந்தால் நல்லது நடக்கும் என்றே அந்தப் பொறுப்பில் டாக்டர் மகேந்திரனை நியமித்தார். ஆனால், கட்சியில் இருந்து விலகியவுடனேயே இதுபோன்று நாகரிகமற்ற முறையில் பேசுவது தவறு. நான் எம்.பி.பி.எஸ் படிக்காமல் இருக்கலாம். ஆனால், மக்கள் மனதை படித்தவள். வாழ்க்கை அனுபவம் இருக்கிறது. 15 நாட்களில் 15,000 வாக்குகள் வாங்கியுள்ளேன்.

             எனக்கு கட்சியில் ஈடுபாடு இல்லை என்றால் விலகிச் செல்வதே நாகரிகம். கட்சியில் யார் சூழ்ச்சி செய்தார்கள் என்பது அவரவருக்குத் தெரியும். இவ்வளவும் விமர்சித்துவிட்டு,  ‘நான் இனியும் கமல் உடன் நட்புடன் இருப்பேன்’ என்கிறார் மகேந்திரன். அந்த நட்பே தலைவர் கமலுக்குத் தேவையில்லை. என்னுடைய தலைவர் அந்த நட்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆனால், அது அவரது விருப்பம். பெரிய மனிதர்கள் வேறு மாதிரி நடந்துகொள்வார்கள். நான் ஒரு சராசரிப் பெண். அதனால், இப்படி சொல்கிறேன். ஒரு சிறந்த நட்பு என்பது நட்பு முறிந்த பின்பும் நாகரிகமாக பேசவேண்டும். இன்னும் ஜாக்கிரதையாக வார்த்தைகளை விடவேண்டும். நட்பு முறிந்துவிட்டால் குற்றம்கூறிப் பேசுவது நல்ல நட்பே அல்ல. மேலும், மூன்று வருடமாகியும் கமல்ஹாசனை ஒரு டாக்டரால் புரிந்துகொள்ள முடியாதது வியப்பாக இருக்கிறது. இவர் ஆடியதையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல்தான் இருந்திருக்கிறேன். என்னுடைய நம்பிக்கை எனது தலைவர் மட்டும்தான். நேற்று நடந்த சம்பவம் விரைவில் நடக்கும்னு  ஒரு வருடத்துக்கு முன்பே நான், தலைவர் கமலிடம் சொல்லியிருக்கேன். பிடிக்கவில்லையென்றால் விலகுவதைத்தான் பார்க்கவேண்டும். கேரக்டரை ஆய்வு செய்யக்கூடாது. இப்படியெல்லாம் பால் போட்டு பேசினால், எங்கள் பக்கமும் பேட் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். அவர், இனிமேலாவது வேறு எந்தக் கட்சிக்கு சென்றாலும் உண்மையான நல்லத்தனத்தை காட்டவேண்டும்.”

டாக்டர் மகேந்திரன் கடிதத்திற்கு கமல்ஹாசனின் பதில் கடிதம் கோபத்தில் அவசரப்பட்டு எழுதியது கடுமையாக இருந்ததே?

”டாக்டர் மகேந்திரன் எழுதிய 12 பக்க கடிதம் எழுதியது சரியானதா? நியாயமாக இருந்ததா?  அவரின், அத்தனை பக்கக் கடிதத்திற்கு 2 பக்கங்களில்தான் விளக்கமளித்தார் தலைவர் கமல். என்னைத் தவறாக சொன்னால் திருப்பி உண்மையைச் சொல்வேன்.  இல்லையென்றால் தவறானவளாகத்தான் தெரிவேன். அதைத்தான் தலைவரும் செய்தார். நீங்கள் தூக்கி அடித்தால் யாரும் சும்மா இருக்க மாட்டார்கள். திருப்பித்தான் அடிப்பார்கள். அதனால், தலைவரின் கடிதம் இட்டுக்கட்டின கடிதம் கிடையாது.”

தோல்வியடைந்ததால்தான் டாக்டர் மகேந்திரன் விலகிவிட்டார் என்று நினைக்கிறீர்களா?

”அதுகுறித்து எனக்கு தெரியாது. விலகிய பின்பு அவரிடம் நான் பேசவும் இல்லை. ஒருமுறை பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக மனு கொடுக்கச் சென்றிருந்தபோது, அவர் வீட்டில்தான் தங்கினேன். மிகச் சிறப்பான விருந்தோம்பல் செய்தார்கள். மற்றபடி பெரிய நட்பு எல்லாம் இல்லை. எல்லோரிடம் நன்கு பழகுவதுபோல் பேசுவேன்.  கட்சியில் மூன்று வருடங்கள் நல்ல படியாக இருந்தீர்கள். தலைவர் கமலுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர்களை விமர்சித்திருக்கிறீர்கள். அது உங்கள் விமர்சனம். ஆனால், தலைவர் மாறிவிட்டார் என்பது கடுமையான வார்த்தை. சரி… விலகியவர் விலகிவிட்டீர்கள். எங்கிருந்தாலும் வாழ்க.”

கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட மநீம வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறதே? சட்டப்பேரவைத் தோல்விக்கு உங்களைப் பொறுத்தவரையில் என்ன காரணம்?

”கூட்டணிக் கட்சிகளுக்கு 80 சீட்டுகள் கொடுத்தோம். முழுக்க நாங்களே போட்டியிட்டால் வாக்கு விகிதம் அதிகரித்திருக்கும். மக்கள் நீதி மய்யத்தில் ஆட்கள் இல்லாமல் கிடையாது. பல மாவட்டச் செயலாளர்கள் வசதிகள் இல்லாதவர்கள். அவர்கள் பொருளாதார ரீதியாக களத்தை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டுகள் கொடுக்கப்பட்டது. எங்கள் கட்சி ஆரம்பித்து 3 வருடங்கள்தான் ஆகிறது. அதில், ஒரு வருடம் கொரோனாவாலேயே போய்விட்டது. அதிக மக்களைப் போய் சந்தித்து பேச முடியாத சூழல். நான் ஓட்டுக் கேட்க சென்றபோது “நீங்க மாஸ்க் போட்டு மூஞ்சை மூடிட்டிங்கன்னா ஓட்டுப் போடமாட்டேன்” என்றார்கள். ”உங்க உயிர் என் ஓட்டை விட முக்கியமானது” என்று சொல்லித்தான் பிரசாரம் செய்தேன். அதனால், கொரோனா சூழலும் ஒரு காரணம்.”

கமல்ஹாசன் தோல்விக்குப் பிறகு எப்படி இருக்கிறார்?

”அவர் உடைந்துவிடவில்லை. முன்பைவிட மக்களுக்காக தீவிரமாக உழைக்க ஆரம்பித்துவிட்டார். எத்தனையோ தலைவர்கள் தோற்றிருக்கிறார்கள்.  மாறி மாறி வந்திருக்கிறார்கள். இந்த நிலைமை மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு கூட ஏற்படவில்லையா? இதுவும் கடந்து போகும். எங்கள் கட்சியை மூடிவிடுவோம் என்று நினைக்கவேண்டாம். இது எங்களுக்கு முதல் படி. தோல்வியை சந்திக்காமல் எந்தக் கட்சி இருக்கிறது?.”

ஆனால், உங்கள் கட்சியிலுள்ள தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்கிறார்களே? கமீலா நாசர் கூட விலகிவிட்டாரே?

”கமீலா நாசர் செய்தது தனிப்பட்டக் காரணங்களுக்காகத்தான். அவரது மகனுக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. கொரோனா சூழலில் வேலை செய்ய ஆள்கள் கிடையாது. அதனால், பார்த்துக்கொள்ள இருக்கிறார். கமீலா நாசரும் நானும் ரொம்ப நெருக்கம். அவர், நன்கு உழைக்கக்கூடியவர். எங்கு நின்றிருந்தாலும் நல்ல வாக்குகளை பெற்றிருக்க முடியும். இரண்டு பெண்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்பார்கள். ஆனால், நாங்கள் அதனை முறியடித்து சாதித்துக் காட்டினோம். மற்றபடி அவர், விலகியதை இதனுடன் சேர்க்கவேண்டாம்.”

மயிலாப்பூர் தொகுதியில் உங்கள் தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?

”இதனை, நான் தோல்வியாகக் கருதவில்லை. திமுகவும் அதிமுகவும் பெரிய அளவில் செலவு செய்தார்கள். திமுக வேட்பாளர் 30 வருடங்களாக அரசியலில் இருக்கிறார். அதிக வாக்குகள் வாங்கினார். ஆனால், நான் 15 நாட்களிலேயே பிரசாரம் செய்து 15,000 ஓட்டுகள் வாங்கியுள்ளேஎன். 15 ஆயிரம் பேர் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே பெரிய சந்தோஷம். அதேசமயம், வாழ்க்கையின் வேறு பக்கத்தையும் பார்த்தேன். உண்மையிலே மயிலாப்பூர் என்றால் சினிமாவில் பார்ப்பதுபோல் அல்ல. அந்தத் தொகுதியில் நிறைய குடிசைப்பகுதியும் வாழ்வாதாரம் இல்லாத மக்களும் இருக்கிறார்கள் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. சரியான சாலை வசதி, விளக்குகள் கூட கிடையாது. இது வாழ்க்கைக்கு பெரிய பாடம். பொதுவாகவே, குடிசைப்படுகுதிகளில் அடித்தட்டு மக்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி தமிழக அரசு போடவேண்டும். மாஸ்க் போடவேண்டும் என்ற விழிப்புண்வு கூட அவர்களுக்கு இல்லை. அம்மை தடுப்பூசி போல கொரோனா தடுப்பூசியும் போய் சேரவேண்டும். அப்போதுதான், ஓரளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.”

- வினி சர்பனா