சிறப்புக் களம்

அரசியல் பாதையில் அடுத்த மூவ் - பல்ஸ் பார்க்கும் விஜய்.. தேர்தல் களமும் மக்கள் இயக்கமும்!

அரசியல் பாதையில் அடுத்த மூவ் - பல்ஸ் பார்க்கும் விஜய்.. தேர்தல் களமும் மக்கள் இயக்கமும்!

கலிலுல்லா

இந்தியாவிலேயே நடிகர் ஒருவர் அரசியலில் வென்று காட்ட முடியம் என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். அவரையொட்டி அரசியலில் குதித்த சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலில் பெரிய அளவில் ஜோலிக்க முடியவில்லை என்றாலும் பின்னாளில் அரசியலில் அடியெடுத்து வைத்த நடிகர்களுக்கு எம்.ஜி.ஆர். ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.

உண்மையில் எம்.ஜி.ஆர் திரைத்துறையினருக்கு உத்வேகமளிக்ககூடியவராகவே இருந்தார். திரைசக்தியை அரசியலில் மடைமாற்றி வென்று காட்ட முடியும் என்ற பார்முலாவை செயல்படுத்தி காட்டியவர் அவர். இந்த பாணியிலிருந்து ரஜினி தப்பித்தாலும், கமல் கரையிலிருந்து குதித்து நீச்சல் அடித்து வருகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக அரசியலை தனக்கு அணுக்கமான துறையாக விஜய் கருதுகிறார். தன் படங்களிலிருந்தே அரசியலுக்கான விதைகளை தூவி வரும் விஜய், அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கத்தை' களமிறக்கி அரசியல் ஆழம் பார்த்தார். அதில் விஜய்க்கு நல்ல பலனும் கிடைத்தது.

இத்தனைக்கும் அந்த தேர்தலில் விஜய்யின் புகைப்படமோ, விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி கொடியோ பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பு இருந்தபோதிலும் 169 இடங்களில் களமிறங்கி 121 இடங்களை தட்டி தூக்கினர். இதில் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் கவனம் ஈர்த்தது. இந்த தேர்தல் வெற்றி விஜய்க்கு உற்சாகத்தை அளித்திருக்க கூடும். அடுத்தடுத்த தேர்தல்களில் களம் காண இந்த தேர்தல் பலமான கடைக்கால் அமைத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்தியதாக செய்தியும் தீயாய் பரவியது.

இதன் தொடர்ச்சியாகத்தான் நகர்புற உள்ளாட்சித்தேர்தலிலும் களம் காண்கிறது விஜய் மக்கள் இயக்கம். இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சென்னை, பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தேர்தலில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் எனத்தெரிவித்துள்ளது. விரைவில் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு லத்தூர் ஒன்றிய தலைவர் தமிழன் மா.கோபிநாத் பேசுகையில், ''விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயலாற்றிக்கொண்டிருக்கிறது. அம்மா உணவகங்களில் கூட காசு கொடுத்து உணவு வாங்கும் நிலையில் நாங்கள் 'விலையில்லா விருந்தகம்' என்ற பெயரில் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்த உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க இலவசமாக, தரமான உணவுகள் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், சத்துணவு என்ற பெயரில் குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி ஆகியவற்றை வழங்கி வருகிறோம். தவிர, கொரோனா காலங்களில் மக்களுக்கு உணவு வழங்கியது, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிறு ஊரடங்கின்போது தெருவோர மக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிப்பது என தொடர்ந்து மக்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அப்படிப்பார்க்கும்போது, பொதுமக்களிடம் புதிதாக சென்று எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற கூறவில்லை. மாறாக தொடர்ந்து மக்கள் பணியில் இருக்கும் எங்களுக்கு அங்கீகாரம் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம். இளைஞர்கள் தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பணமோ, வேறு எதையுமே கொடுக்காமல் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலை பொறுத்தவரை நாங்கள் ஆட்டோ சின்னம் கேட்டிருக்கிறோம். விரைவில் கட்சி பதிவு செய்யப்பட்டு,சின்னம் உறுதியாகும் என தகவல் வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 வேட்பாளர்கள் களத்தில் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

மதுராங்கத்தில் 3 வேட்பாளர்கள் உறுதியாகியுள்ளனர். திங்கள், செவ்வாய்கிழமையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். விஜய் மக்கள் இயக்கத்தில் இல்லாத பலரும் எங்களை அணுகி போட்டியிட விருப்பம் தெரிவிக்கின்றனர்.ஊரக உள்ளாட்சி தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தல் சவலாக இருக்கும் என கருதுகிறோம். தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். பெரிய கட்சிகள் என்ன முறைகளை பின்பற்றுகிறார்களோ, நாங்களும் அதே பின்பற்றி வருகிறோம்'' என்றார்.