சிறப்புக் களம்

#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்!

#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல - ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்!

EllusamyKarthik

#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேகில் ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவாகவும், #தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் எனும் ஹேஷ்டேகில் அவருக்கு எதிரான கருத்துகளும் ட்விட்டரில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேகுகளில் ட்ரெண்டிங் யுத்தமே நடந்து வருகிறது.

பொதுவாக கடைநிலைத் தொண்டனும் ஓர் அரசியல் இயக்கத்தில் தலைமையைக் கேள்வி கேட்கலாம் என தலைவர்கள் சொல்வது உண்டு. உலகம், இந்தியா மற்றும் தமிழக என அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்ற தலைவர்கள் இதை சொல்வதுண்டு. இது பழங்கால மன்னர்களின் ஆட்சி முறை பாரம்பரியத்திலிருந்து வந்தது என்றும் சொல்லலாம். இந்நிலையில் இதை எளிமையாக்கி உள்ளது இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம். 

சமூக வலைத்தளங்கள் மூலமாக அதன் பயனர்கள் ஒன்றை ஆதரிப்பதும், எதிர்ப்பதும், விமர்சிப்பதும் என ஹேஷ்டேக் மூலமாக புரட்சி பேசுவது உண்டு. கால் நூற்றாண்டுக்கும் மேலாக தனது அரசியல் வருகை குறித்து மவுனம் காத்து வந்த இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கும் நெட்டிசன்கள் ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரியை ட்விட்டர் மாதிரியான தளத்தில் வரவேற்றும் விமர்சித்தும் வருகின்றனர்.

இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல’ என ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருந்தார். இன்றும் ஹேஷ்டேகுடன் சொன்னார். தற்போது அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

‘நீ வா தலைவா பாத்துக்கலாம்’, ‘அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என சொல்லியவர்கள் எல்லோரும் இப்போது வாயடைத்து போயுள்ளனர்’, ‘ஆனந்த மிகுதியில் எனது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீரை சிந்துகிறேன்.. சொர்க்கத்தில் இருப்பது மாதிரியான பிரம்மை… வா தலைவா’, ‘இப்போ அண்ணாத்த ரஜினிகாந்த ரசிகர்களுக்கு குஷி தான்’ என பாஸிட்டிவாக அவரது ரசிகர்கள் இதை ட்ரென்ட் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேகில் இன்று மாலை நிலவரப்படி, 1 லட்சத்து 30 ஆயிரம் ட்வீட்டுகள் குவிக்கப்பட்டு, இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் வகித்துள்ளது.

‘இரண்டு மாதம் மருத்துவ விடுப்பில் சென்று விடாதீர்கள்’, ‘அவருக்கு வலது பக்கம் முன்னாள் பாஜக உறுப்பினரும், இடது பக்கம் காங்கிரஸ் உறுப்பினரும் இரு கரங்களாக இருக்கிறார்கள்… அவ்வளவு தான்’ என ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சித்தும் ட்வீட் செய்து வருகின்றனர் சிலர். 

மறுபக்கம் தமிழரின்நாட்டை தமிழர் தான் ஆள்வோம் என்பதும் டிரெண்டாகி வருகிறது. இது ரஜினிகாந்த்துக்கு எதிராக டிரெண்ட் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர். அதை வைத்து இந்த ட்வீட் டிரெண்டாகிறது. 

“தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021இல் நடந்தே தீரும்” என்பது ட்வீட்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ட்ரெண்டிங்கில் 5-வது இடத்திலுள்ள இந்த ஹேஷ்டேகில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்கள் கொட்டப்பட்டுள்ளன. 

அதேபோல #Rajinikanth#RajiniPolitics, #RajiniPoliticalEntry முதலான ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.