சிறப்புக் களம்

சுப்மன் கில் இல்லாத குறையை தீர்ப்பாரா அபிமன்யு ஈஸ்வரன்? யார் இவர்?

சுப்மன் கில் இல்லாத குறையை தீர்ப்பாரா அபிமன்யு ஈஸ்வரன்? யார் இவர்?

jagadeesh

உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் தோல்வி என இங்கிலாந்து நாட்டின் சுற்றுப் பயணம் இந்திய அணிக்கு அவ்வளவு இனிதாக தொடங்கவில்லை. ஆனாலும் இன்னும் ஓர் மாதம் அந்நாட்டில் தங்கி இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது இந்தியா.

கடந்தாண்டு இறுதியில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார் சுப்மன் கில். இந்தியாவின் நிலையான தொடக்க ஆட்டக்காரராக உருவெடுத்து வரும் சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவதற்கு முன்பாகவே காயமடைந்திருக்கிறார் அவர்.

இதனால் அவரால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ஏற்கெனவே தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஏற்கெனவே இருக்கின்றனர். மேலும் ரிசர்வ் பேட்ஸ்மேனாக அபிமன்யு ஈஸ்வரன் என புதுமுகமும் இருக்கிறார்.

ஆனாலும், இந்திய டெஸ்ட் அணி கூடுதலாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு கேட்டது. ஆனால் பிசிசிஐ அந்த கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாமல், சுப்மன் கில்லுக்கு பதிலாக புதுமுக வீரர் அபிமன்யு ஈஸ்வரை பயன்படுத்திக்கொள்ளுமாறு இந்திய அணியின் தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்க மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் இடையே பெரும் போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்வாளர்கள் அபிமன்யூ ஈஸ்வரனை பெரிதும் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே யார் இந்த அபிமன்யூ ஈஸ்வரன் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மேலும் சுப்மன் கில் இல்லாத குறையை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தீர்ப்பாரா அபிமன்யு ஈஸ்வரன் என்ற ஆவலும் ஏற்பட்டிருக்கிறது.

யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?

25 வயதாகும் வலது கை தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்து மேற்கு வங்க மாநிலத்துக்காக ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2018 -2019 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன், அத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 861 ரன்கள் அடித்து அசத்தினார். அத்தொடரில் அவருடைய சராசரி 95.66 ஆகும். இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் மேற்கு வங்க அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கு வங்க அணியை ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார் அபிமன்யு.

துலீப் ட்ராபியில் இந்தியா ரெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அத்தொடரின் இறுதியாட்டத்தில், இந்தியா கிரீன் அணிக்கு எதிராக 153 ரன்கள் அடித்து அசத்தினார் அபிமன்யு. இதுவரை 64 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அபிமன்யு ஈஸ்வரன் 43.57 என்ற சராசரியில், மொத்தம் 4401 ரன்கள் குவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 233 ஆகும். இதன் காரணமாக அபிமன்யு மீது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் கவனம் திரும்பியது. இதனையடுத்து இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணியில் கூடுதல் வீரராக தேர்வு செய்தனர். இப்போது இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது அபிமன்யுவுக்கு.