சிறப்புக் களம்

நெல் பயிரிடும் விவசாயிகள் எப்படி கடனாளி ஆகிறார்கள்? - இந்த கணக்கீட்டை பாருங்கள்

நெல் பயிரிடும் விவசாயிகள் எப்படி கடனாளி ஆகிறார்கள்? - இந்த கணக்கீட்டை பாருங்கள்

rajakannan

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், அரிசி உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். அதன் அடிப்படையில் ஓரளவுக்கு நீர் வளம் இருந்தாலும் விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் மேற்கொள்கிறார்கள். நெற்பயிர் சாகுபடி செய்ய சுமார் 4 முதல் 5 மாதங்கள்  ஆகும். எவ்வளவு நெருக்கடியான சுமைகளையும் பொறுத்துக் கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடியை செய்து வருகிறார்கள்.

முப்போகம் விளைவித்த காலங்கள் மாறினாலும், குறைந்த பட்சம் ஒரு போகம் நெற்பயிர் சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் மேற்கொள்கிறார்கள். அதன் அடிப்படையில் மார்கழி, தை மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் ஒரு போகம் நெல் சாகுபடி மட்டும் பெரும்பாலும் நடைபெறுகிறது. அந்த வகையில், தற்போது தமிழத்தின் சில இடங்களில் பயிர் நட்டுக் கொண்டிருப்பார்கள்.

சில இடங்களில் நாத்து ஒரு மாதம் வளர்ந்திருக்கும். சில இடங்களில் இரண்டு மாதம் நெற்கதிர் நன்றாக வளர்ந்து கதிர் விட ஆரம்பித்திருக்கும். எப்படி பார்த்தாலும், தமிழகத்தில் இன்றைய தினத்தில் பெரும்பாலான கிராமங்கள் மிகவும் பசுமையுடன் காட்சியளிக்கும். இத்தனை அழகினையும், விவசாயிகளும், விவசாய கூலிகளும் சேர்ந்து உருவாக்கினார்கள். 

விதை நெல் முதல் அறுவடை வரை என்ன என்ன செலவுகள் (ஒரு ஏக்கருக்கு):-

விதை நெல் முதல் நாத்து விடுதல் வரை 

முன்பெல்லாம் அடுத்த போகத்திற்கு தேவைப்படும் விதை நெல்லை எடுத்து வைக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது பெரும்பாலும் அந்த வழக்கம் இல்லை. சில விவசாயிகள் மட்டும் அந்த முறையை கடைபிடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும், விதை நெல்லை பணத்திற்கு தான் வாங்குகிறார்கள். பல விவசாயிகள் நாத்தினை கூட விலைக்கு வாங்குகிறார்கள். விதை நெல் ஏக்கருக்கு 50 கிலோ தேவைப்படும். அதன் விலை ரூ.1600 ஆகும். நாத்து பயிரிடுவதற்கான நிலத்தை தயார் செய்வதற்கான செலவு உள்ளது. சுமார் 10 முதல் 15 நாட்களுக்கு நாத்து நன்றாக வளர உரமிடுவார்கள். இதற்கு குறைவான செலவே ஆகும். 

நெற்பயிருக்கான நிலத்தை தயார் செய்தல்

பயிர் நடுவதற்கு ஏற்றார் போல் நிலத்தை தயார் செய்ய வேண்டும். அதற்கு நிலத்தை இரண்டு முறை உழ வேண்டும். இது மண்ணின் தன்மையை பொறுத்து மாறும். முதலில் உழும் போது மண் பெரும் கட்டிகளாக இருக்கும். பின்னர் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் உழுவார்கள். டிராக்டர் உழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.1200 வாங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் உழுவதற்கு ஒன்றரை மணி நேரம் வரை ஆகும். அதனால், ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1800 செலவாகும். இரண்டு முறை உழுதால் ரூ.3600 ஆகிறது. இதன் பின்னர், பயிர் நடுவதற்கு முன்பு தண்ணீர் நிரம்ப விட வேண்டும். அப்போது, மேடு, பள்ளம் இல்லாமல் நிலத்தை சமப்படுத்த வேண்டும். அதற்கு சேறு களக்கி, பின்னர் மாடுகளை கொண்டு மட்ட பளவை அடிப்பார்கள். தற்போது நிறைய இடங்களில் பவர் ட்ரில்லர் வைத்து சேறு களக்குகிறார்கள். இதனால், அந்த இயந்திரத்திற்கான வாடகை உண்டு. சொந்தமாக இயந்திரம் வைத்திருந்தால் செலவு குறையும். சொந்தமாக மாடுகள் வைத்திருந்தால் செலவுகள் குறையும். இல்லையெனில் மொத்த செலவும் விவசாயியின் தலையில் விழும். 

நாத்து பிடிங்கி பயிர் நடுதல்:-

பயிர் நடும் நாளில் தான் அதிக செலவு ஆகும். முதலில், பயிர் நடுவதற்கு முன்பு அடி உரம் இட வேண்டும். உரத்திற்கு சுமார் ரூ.2000 முதல் ரூ.2500 வரை செலவாகும். பயிர் நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு சுமார் 18 ஆட்கள் வேலை செய்வார்கள். இவர்கள் பெண் கூலி ஆட்கள். இவர்களுக்கு தினக்கூலி ரூ.150. அப்படி என்றால் ஒரு ஏக்கருக்கு பயிர் நட ஆகும் செலவு ரூ.2880 ஆகும். சில நேரங்களில் டீ, சாப்பாடு செலவும் உண்டு. நடுவு அன்று வரப்புகள் முழுமையாக கழிக்கப்பட்டிருக்கும். அதற்கு கூலி ஆட்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.800 ஆகும். 

களை பறித்தல், மருந்து அடித்தல், உரமிடுதல்

பயிர் நட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் முதல் களை பறிப்பார்கள். இதற்கு சுமார் 15 ஆட்கள் வேலை செய்வார்கள். ஆள் ஒன்றிற்கு ரூ.150 கூலி வீதம் மொத்தம் ரூ.2250 ஆகும். களை பறித்த 15 நாட்களுக்குள் மருந்து தெளிக்க வேண்டும். இதில் மருந்து வாங்கும் செலவு, மருந்து அடிக்கும் ஆள் கூலி இரண்டும் தனித்தனி. இதற்கு மொத்தம் ஒரு ஏக்கருக்கு ரூ.1000 செலவு ஆகும். சில விவசாயிகள் தாங்களே மருந்து அடிக்கும் டேங்கர் வாங்கி அடித்துக் கொள்வார்கள். இதற்கு தேவைப்பட்டால் பயிர் வளர்வதை பொறுத்து இரண்டு முறை அல்லது ஒரு முறை உரமிடுவார்கள். 

அறுவடை நாள் செலவு

தமிழகத்தில் மிகவும் குறைவான இடங்களில் தான் கைகளில் அறுவடை செய்கிறார்கள். பெரும்பாலும் நெல் அறுவடை இயந்திரம் மூலம் தான் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடைக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2000 ஆகும். ஏக்கர் அறுவடை செய்ய சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். அதன்படி பார்த்தால் ஏக்கர் அறுவடைக்கு ரூ.3000 ஆகும். 

ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு 

1. விதை நெல் (50கிலோ) - 1600
2. ஏர் ஓட்டுதல் (2 )       - 3,600 (1800+1800)
3. மட்ட பளவ அடித்தல்  - 600
4. அடி உரம் போடுதல்   - 2,000
5. நாத்து நடுதல்         - 4,500
6. கள பறித்தல்          - 2,250
7. மருந்து அடித்தல்      - 1,000
8. இரண்டாம் உரம்      -  1,500
9. அறுவடை             - 3,300

மொத்தம்                - ரூ20,000/- (குறையாமல்)

நெல் சாகுபடியும், கொள்முதல் விலையும் :-

ஆனால், ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் சாகுபடி கிடைக்கும். சில நேரங்களில் 25 முதல் 30 மூட்டைகள் தான் சாகுபடி ஆகிறது. அறுவடைக்கு பின் நெல் மூட்டை பிடிக்கும் போது, சில அநியாயங்கள் நடக்கும். அதாவது, ஒரு மூட்டைக்கு 75 கிலோ என்றால், பொதுவாக ஒரு இரண்டு, மூன்று கிலோ நெல் கூடுதலாக எடை பிடிப்பார்கள். ஆனால், நிறைய நெல் வியாபாரிகள் 5 முதல் 7 கிலோ வரை கூடுதலாக பிடிக்கிறார்கள். இதில் அவர்களுக்கு சில மூட்டைகள் குறையும்.

விலையை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக விலை இருப்பதில்லை. நெல்லின் ரகத்தை பொறுத்தும் விலை மாறும். பொன்னி நெல் ரகத்திற்கு சுமார் ரூ1500 முதல் ரூ2000 வரை விலை கிடைக்கும். ஆனால், சில நேரத்தில் விலை ரூ1300 வரை கூட சரியும். சில நெல் ரகங்கள் சராசரியாக ரூ1000 - ரூ1200 வரை விலை போகும். சில நேரங்களில் ரூ850 வரை கூட சரியும். 

விவசாயிக்கு என்ன லாபம்:-

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ரூ20 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், நெல் நன்றாக விளைச்சல் ஆகி நல்ல விலை கிடைத்தால் ரூ30000 முதல் ரூ35000 வரை கிடைக்கும். ஆனால், சமீப காலமாக அப்படி எதுவும் நடப்பதில்லை. விளைச்சல் அளவும் நிறைய நேரங்களில் குறைகிறது. விலையும் பொதுவாக கிடைப்பதில்லை. சமீபகாலமாகவே நெல் சாகுபடி லாபம் ஈட்டும் தொழிலாக இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். லாபம் கிடைக்கவில்லை என்றாலும் கூட நஷ்டம் அடைவதாக வேதனை அடைகின்றனர். கடன் மேல் கடன் வாங்கி நெல் சாகுபடி செய்து வருகிறார்கள் என்றால், ஒன்று இயற்கை பேரிடர் காரணமாக விளைச்சல் குறைகிறது. சில நேரங்களில் அடியோடு அழிகிறது. இரண்டாவது கஷ்டப்பட்டு விளைச்சல் எடுத்தாலும் உரிய விலை கிடைப்பதில்லை.

விவசாயிகளுக்கு கூடுதல் சுமை:-

இதனையெல்லாம் தாண்டி நெல் சாகுபடி செய்யும் 5 மாதங்களில் ஒரு விவசாயிக்கு இடையிடையே நிறைய வேலைகள் இருக்கும். அதனையெல்லாம் அவர்கள் தாங்களாகவே செய்து கொள்வார்கள். ஓரளவுக்கு பணம் இருக்கும் விவசாயிகள் டிராக்டர், பவர் ட்ரில்லர் உள்ளிட்ட இயந்திரங்களை சொந்தமாக வைத்திருப்பார்கள். அதோடு, பணத்தை கடன் வாங்காமல் தன்னுடைய இருப்பில் இருந்து செலவிடுவார்கள். ஆனால், சில ஏக்கர் நிலம் வைத்துக் கொண்டு அதில் பயிர் செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் பாதிக்கும் மேல் கடன் வாங்கியே செலவிடுகிறார்கள். அதற்கான வட்டிப் பணமும் அவர்களுக்கு கூடுதல் சுமை.

'உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கோலும் மிஞ்சாது' என்பார்கள். அது அத்தனை உண்மையான வார்த்தைகள். பருவமழை, நல்லவிலை என அனைத்தும் கைகொடுத்தால் தான் ஒரு விவசாயி சராசரியான லாபத்தையே பெற முடிகிறது என்ற நிலைதான் இன்று. ஒரு வேளை பசியின் கொடுமையை அறிந்த பலராலும், உணவின் தேவையை அறிந்த பலராலும், அதை உருவாக்கும் விவசாயியின் கஷ்டத்தை அறிய முடிகிறதா என்பது தான் கேள்விக்குறி. எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும், இயற்கை தான் ஆரோக்யம். கம்யூட்டரில் தட்டினால் அரிசி வந்து கொட்டிவிடபோவதில்லை. அரிசிக்கு மண்ணும், விவசாயியும் வேண்டும். அதை இவ்வுலகம் உணர வேண்டும்.

நன்றி: உதயம்பாக்கம், பொன்விளைந்தகளத்தூர் கிராம விவசாயிகள்.