crime against women crime against women
சிறப்புக் களம்

இந்தியாவில் ஒரே ஆண்டில் 46% அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - NCW அறிக்கை

இந்தியாவில் ஒரே ஆண்டில் 46% அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - NCW அறிக்கை

Madhalai Aron

2020-ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு
கொல்லப்பட்டார். அதன்பின், உத்தரப் பிரதேச மாநிலம், பல்ராம்பூரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டதால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேசம் கார்கோனே மாவட்டத்தில் உள்ள மருகார் என்ற கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் கடத்தி மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் என்ற பகுதியில் வேலை கேட்டுச் சென்ற பிரெமோஜோதி தூரி என்ற 22 வயது அஸ்ஸாம் மாநில பெண்ணை ஆறுபேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பெண் குத்திக் கொலை, இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு
நாளும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. பாதிக்கப்படும் பெண்களின் பெயர்கள் மட்டும் அவ்வப்போது மாறுகிறதே தவிர, குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதில்லை.

இத்தகைய கொடூரச் சம்பவங்களையெல்லாம் கேட்கும்போதே மனம் பதறுகிறது என்றாலும்கூட மீண்டுமொரு பெண் என்ற வகையிலேயே இதை இந்தியா எதிர்கொள்கிறது என்பது, கூடுதல்
வேதனை. அந்தளவுக்கு இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய தலைவரான ரேகா
சர்மா வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் 2020-ஐ காட்டிலும், 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 13,618 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதேபோல், 2021-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 19,953 குற்றங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

மாநில வாரியாகப் பார்த்தால், அதிக குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும் உள்ளது. 2021-ல் உத்தரப்
பிரதேசத்தில் 8 மாதங்களில் மட்டும் 10,084 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லியில் 2,147 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹரியானாவில்
995 குற்றங்களும், மகாராஷ்டிராவில் 974 குற்றங்களும், கர்நாடகாவில் 467 குற்றங்களும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 8 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 375 குற்றங்கள் பதிவாகியுள்ளது வேதனைக்குரியது.

பாலியல் வன்முறை செய்யப்பட்டு, ஒரு பெண் உயிரிழந்தால் மட்டும்தான் அந்த செய்தி பெரிதாகப் பேசப்படுகிறது. உயிருடன் இருக்கும் ஒரு பெண் பாதிக்கப்படும்போது அப்படி நடப்பதில்லை. இதனால் அந்தப் பெண் மட்டுமே அதிகளவில் பாதிக்கப்படுகிறார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே, இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். அவை - ஒன்று, குற்றவாளிகளின் ஆதிக்க மனப்பான்மை; மற்றொன்று, இந்தக் குற்றங்களைச் செவி வழியில் கிடைத்த வெறும் செய்தியாகக் கடக்கும் சமூகம். அந்தவகையில், அமைதியைத் தவிர்த்து, இந்தச் சமூகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, என்ன பதில் சொல்லப்போகிறது என்பதில்தான் இந்தப் பட்டியல் இன்னும் நீளுமா இல்லை இனியாவது குறைய வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியும்.