சிறப்புக் களம்

ஏவுகணை மனிதரின் நினைவு தினம் இன்று

ஏவுகணை மனிதரின் நினைவு தினம் இன்று

webteam

ஏவுகணை மனிதர், கனவு காண கற்றுக் கொடுத்தவர், மக்களின் குடியரசுத் தலைவர் என்றெல்லாம் போற்றப்பட்ட ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் இன்று.

ராமேஸ்வரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக உருவெடுத்து, பின்னாளில் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் அப்துல் கலாம். உலகம் போற்றும் மாமனிதராக இருந்தாலும், எளிமையானவராக வாழ்ந்து காட்டிய எளியவர். வானியல் துறையில் அளப்பறிய சாதனை படைத்திருந்தாலும், கால்களை இழந்த குழந்தைகளுக்கு, 400 கிராமில் எடை குறைந்த செயற்கைக் கால்களை தயாரித்ததில் தான் அவர் மிகுந்த மனநிறைவு கொண்டார். லட்சக்கணக்கில் விற்பனையான இதய நோயாளிகளுக்கு பயன்படக் கூடிய ஸ்டெண்ட் எனப்படும் கருவியை வெறும் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் வகையில் புதிய ஸ்டெண்ட் கருவியை கண்டுபிடித்ததும் கலாமுக்கு மகிழ்ச்சியை தந்தது.

நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் கல்வியிலேயே அதிக அக்கறை கொண்டிருந்த கலாம், குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகும், தனது கற்பித்தல்‌ பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. பல்கலைக்கழங்கள், பள்ளிக் கூடங்கள் என தேடிச் சென்று தேசத்தின் இளம் தலைமுறைக்கு தனது பட்டறிவை கற்றுக் கொடுத்து வந்தார். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்பதற்கேற்ப தனது கடைசி மூச்சு வரை, ஆசிரியர் பணியை செய்தவர் அப்துல் கலாம். அவரது எண்ணத்திற்கேற்ப 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மேகலாயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தார் அப்துல் கலாம்.

எதிர்பாராத விதமாக கலாம் உயிரிழந்‌தாலும், தேசத்தின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் மனதில் அவர் விதைத்துச் சென்ற விதை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பேக்கரும்பில் இருக்கும் அவரது நினைவிடத்துக்கு தங்கள் பிள்ளைகளுடன் வரும் பெற்றோரே இதற்கு சாட்சி.

கலாமின் நினைவிடத்துக்கு இதுவரை 33 லட்சம் பேர் வந்து சென்றிருப்பதாக தெரிவிக்கும், கலாமின் அண்ணன் மகள் நசிமா, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், இளைஞர்கள் கலாமை மறக்க மாட்டார்கள் என்றும், தேச வளர்ச்சி மீது அக்கறை கொண்ட இளைஞர்கள் இங்கு நிச்சயம் வந்து செல்வார்கள் என்றும் தெரிவித்தார்.

கனவு காணுங்கள் என்ற கலாமின் தாரக மந்திரத்தை நினைவுக் கூர்ந்து இந்தியாவை வல்லரசாக்க இளைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.