கேரளா மலைவாசஸ்தலங்களுக்கு மட்டுமல்ல; அதன் கடற்கரைகளுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. கேரளா ஒரு கடற்கரை மாநிலமாக இருப்பதால், அதன் சில கண்கவர் கடற்கரை தலங்கள் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடங்களாக உள்ளன.
கேரளாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களின் அழகை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அங்கிருக்கும் கடற்கரைகள் கேரளாவிற்கு கூடுதல் அழகை தருகின்றன.
எப்போதும் பிரபலமான இடங்களுக்கு சென்று உங்களுக்கு போர் அடிக்கவில்லையா? யாருக்கும் தெரியாத, இன்னும் பிரபலம் அடையாத இடங்களுக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? இதோ கேரளாவின் அழகான கடற்கரையின் பட்டியலை தருகிறோம். இப்போதே ரெடியாகுங்கள்....
எர்ணாகுளம் மாவட்டம் செராயிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குழுப்பிள்ளி கடற்கரை. இந்த கடற்கரையின் விசேஷம் என்ன தெரியுமா? இதற்குச் செல்லும் பாதை. கடற்கரையை நோக்கி நீங்கள் நடந்து செல்கையில் இரு கரைகளிலும் நீர் ததும்பும் மீன் பண்ணைகளை பார்க்கலாம்.
அதிகாலை அல்லது மாலை வேளைகளில் இங்குச் செல்வது நல்லது. மீன் பண்ணைகளும் இறால் மீன்களும் இங்கு மிகவும் பிரபலம். ஆகையால் இங்கு செல்வோர், அங்கு இருக்கக் கூடிய உணவகங்களில் தவறாமல் கடல் உணவுகளை வாங்கி சாப்பிட மறக்காதீர்கள்.
ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடுகளை அமைத்து குஞ்சுகளை பொறிப்பதற்காக குழுப்பிள்ளி கடற்கரைக்கு வருகை தந்தது சமீபத்தில் பரபரப்பு செய்திகளாக பத்திரிகைகளில் வந்தது. உள்ளூர் மீனவர்களின் உதவியோடு சமூக வனத்துறை பிரிவு இந்த ஆமைகளை பாதுகாத்து வருகிறது.
செராய் கடற்கரையின் தொடர்ச்சியாகவே முன்னாம்பம் பீச்சை கருதலாம். இங்குதான் பெரியார் ஆறு அரபிக் கடலில் கலக்கிறது. இந்தக் கிராமத்தில் இருக்கும் பழமையான மீன்பிடி துறைமுகமும் வானத்தை அலங்கரிக்கும் சீன மீன்பிடி வலைகளும் மிகவும் புகழ்பெற்றவை. சமீபத்தில் இங்கு சில நீர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
இங்கும் வருடம்தோறும் நடைபெறும் காற்றாடித் (பட்டம்) திருவிழா தவிறவிடக் கூடாத ஒன்று. இதற்காகவே நாடு முழுவதிலும் இருந்து பலரும் இங்கு வருகை தந்து பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வித விதமாக காற்றாடியை பறக்க விடுகிறார்கள்.
காரிலிருந்து இறங்காமலேயே, கடற்கரை மணலில் உங்கள் பாதம் படாமலேயே கடற்கரையின் அழகை ரசித்திருக்கிறீர்களா? அப்படி நம் இந்தியாவில் மொத்தமே 5 டிரைவ் இன் பீச் மட்டுமே உள்ளது. அதில் ஒன்றுதான் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் முழப்பிலங்காடு பீச். இந்த கடற்கரையின் நீளம் மட்டுமே 4 கிலோமீட்டர். பறவை ஆர்வலர்களுக்கு இது முக்கியமான இடமாக கருதப்படுகிறது.
இங்கு குளிர்காலத்தில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட வலசைப் பறவைகளை பார்க்கலாம். கடற்கரைக்கு சற்று தொலைவில், நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது தர்மடம் தீவு. இங்குச் சென்று அழகான பகுதிகளை புகைப்படம் எடுக்கலாம். இங்கு செல்லும் போது ஒன்றை மட்டும் கவனத்தில் வைத்திருங்கள். பெரிய அலை வருவதற்கு முன் இத்தீவிலிருந்து வெளியேறி விடுங்கள்.
கோவளம் கடற்கரையிலிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் அமைந்திருக்கிறது வர்கலா பீச். இங்குள்ள செங்குத்தான மலை உச்சிகளும், பொன்னிற மணல்களும், கடற்கரையெங்கும் பூத்து குலுங்கும் காட்டுப்பூக்களும் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். இதை பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கிறார்கள். இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கவும் இந்த கடலில் முங்கி எழுந்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து போகும் என்ற நம்பிக்கையாலும் பலர் இந்த கடற்கரைக்கு வருகை தருகிறார்கள். கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் வித்தியாசமான நிலப்பரப்பு கொண்ட இடம் இது.
இந்தக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்திலும் பிரிட்டிஷாரின் தாக்கம் அதிகமாக இருக்கும். முக்கியமாக கடற்கரையில் இருக்கும் நூற்றாண்டுகளை கடந்த அஞ்செஞ்சோ கலங்கரை விளக்கம் 130 அடி உயரம் கொண்டது. கடந்த காலங்களில் இது கடலில் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது.
விடுமுறை காலங்களில் ஆலப்புழா மற்றும் மராரி கடற்கரையில் கூட்டம் அலைமோதும். யார் தொந்தரவும் இல்லாத, அமைதியான கடற்கரையில் உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் ஆலப்புழா மாவட்டம் தைக்கல் பூச்சுக்குத்தான் வர வேண்டும். தெள்ளத்தெளிவான நீர், தூய்மையான மணல் என உங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைக்கும்.
1,000 வருடம் பழமையான பாய்மரப் படகின் பாகங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் கடலின் அடியிலிருந்து கண்டுப்டிக்கப்பட்டது. இது இங்கு வருவோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது இந்த படகின் எச்சங்கள் அகழ்வாராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் அருகிலேயே மிகவும் புகழ்பெற்ற அர்த்துங்கல் தேவாலயம் உள்ளது.
திக்கோடி பீச்சை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இதுவும் ஒரு டிரைவ் இன் பீச் தான். இங்கிருக்கும் நான்கு கிலோமீட்டர் தூரம் கொண்ட தூய்மையான, இறுகிப் போன மணல் தரையில் காலாற நடந்தவாறே சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிக்கலாம்.
இங்கிருக்கும் மணல் மற்ற கடற்கரை மணல் போல் இல்லாமல் மிகவும் உறுதியான தரையாக இருப்பதால் காலை, மாலை வேளைகளில் பலரும் வாகனம் ஓட்டுவோர்கூட இங்குதான் பயிற்சி செய்கிறார்கள். இங்குசெல்வோர், கடற்கரையின் அருகிலிருக்கும் நந்தி கலங்கரை விளக்கம் மற்றும் பாறைகள் நிரம்பிய வெள்ளியம் கள்ளு தீவை சென்று பார்க்க மறந்துவிடாதீர்கள்.
இந்த ஆழமற்ற, பரந்து விரிந்த கடற்கரையை உள்ளூர் மக்களின் உதவியில்லாமல் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அடர்த்தியான அலையாத்தி காடுகளுக்கு இடையே ஒளிந்திருக்கிறது இந்த பீச். போட்டோ எடுப்பதற்கும், ஒருநாள் முழுதும் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவதற்கும் இது சிறந்த இடம். இந்தக் கடற்கரைக்குச் செல்லும் பாதையின் ஒரு கரையில் ஆறும் மற்றொரு கரையில் கடலும், ஆங்காங்கே சிறு சிறு குடில்களும் என ‘மினி கோவாவாகவே’ காட்சி தருகிறது இந்தக் கடற்கரை.
ஆறு, கடல், அலையாத்தி காடுகள் யாவும் சங்கமிக்கும் இடமே இந்த கடற்கரை. நிறைய கடற்கரையில் இந்தக் காட்சிகளை நீங்கள் பார்க்க முடியாது. இந்தக் கடற்கரை அமைதியாக காணப்பட்டாலும் தண்ணீருக்குள் இறங்குவது சற்று ஆபத்தானது. ஆகவே குழந்தைககளுடன் இங்கு செல்வோர், அவர்களை தண்ணீருக்குள் இறங்க விடாதீர்கள்.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான பய்யம்பாலம் கடற்கரையின் அருகிலேயே இந்த பீச் இருக்கிறது. ஆழிகோடு கிராமத்தில் இருக்கும் செங்குத்தான பாறை மற்றும் ரகசிய குகைகளின் இடையே அமைந்திருக்கிறது மீன்குன்னு (மீன்களின் மலை). இது ஒரு மீனவ கிராமம் என்பது பெயரைப் பார்த்தாலே தெரிந்திருக்கும்.
மீனவர்களை தவிர வேறு யாரையும் இந்தக் கடற்கரையில் பார்க்க முடியாது. நீங்கள் தனிமையைத் தேடி வந்தீர்கள் என்றால், இது உங்களுக்கு சிறந்த இடமாக அமையும். இங்குள்ள பாறை உச்சியில் நின்று பார்த்தால், சூரியன் மறையும் கண்கொள்ளாக் காட்சியை நீங்கள் கண்டு ரசிக்கலாம்!
கேரளாவின் மிகச்சிறந்த பீச் என்றால் அது கோவளம் தான். ஆழமற்ற கடலும், குறைவான அலைகளும் இந்த கடற்கரைக்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன. இதன் அருகிலேயே கிரெசண்ட் பீச், ஹவா பீச் போன்றவை உள்ளன. இங்கு சூரியக் குளியல் மிகவும் பிரபலம். ஆகையால் நிறைய வெளிநாட்டினரை இக்கடற்கரையில் பார்க்கலாம்.
கோவளத்தில் கட்டுமரத்தில் பயணம் செய்யலாம், சர்ஃபிங் செய்யலாம். கோவா கடற்கரையை விட இதன் சூழல் அமைதியானது. மேலும் இங்கு கேரளாவிற்கு உலகளவில் புகழைப் பெற்று தரும் ஆயுர்வேத சிகிச்சை மையங்களும் பல உள்ளன.
கிழக்கின் வெனிஸ் என அழகைக்கப்படும் ஆலப்புழா, கேரளாவின் கடல்சார் வரலாற்றில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஆலப்புழாவை கடந்து சென்றே பல ஆறுகள் அரபிக் கடலில் கலக்கின்றன. ஆகையால் ஒரு தீவைப் போல் காட்சி தருகிறது ஆலப்புழா. இங்கிருக்கும் பழமையான கப்பல்துறையும் கலங்கரை விளக்கமும் புகழ்பெற்ற விஷயங்கள்.
கழிமுகத்திற்கும், படகு வீட்டிற்கும் மீன்பிடி தொழிலுக்கும் புகழ்பெற்றது ஆலப்புழா. ஒவ்வொரு புது வருடப் பிறப்பின் போதும் ஆலப்புழாவில் ஒருங்கிணைக்கப்படும் பீச் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பல ஊர்களில் இருந்தும் இந்த விழாவில் பங்கேற்க மக்கள் வருகை தருகிறார்கள்.