தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர, கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி ரத்து செய்தார். தேர்வுக்கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சிபெற்றதாகவும் அறிவித்தார்.
அரியர் தேர்வில் தேர்ச்சிபெற்றதாக அறிவித்துள்ளதை ஏற்கமுடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் கூறியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார். இதுபற்றிப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “அரியர் தேர்வை ரத்து செய்யும் அரசின் முடிவில் எந்த மாற்றமில்லை. ஒருவேளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் வந்திருக்கிறது என்றால், அவர் இதுகுறித்து கவுன்சிலுக்கு என்ன கடிதம் எழுதியுள்ளார் எனப் பார்க்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தற்போது தமிழக அரசின் நடவடிக்கைக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) எதிர்ப்புத் தெரிவித்து எழுதிய கடிதம் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார். அதில், “எந்தவொரு தேர்வையும் நடத்தாமல் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. இதுபோன்ற மாணவர்கள் தொழில்துறையாலும், உயர்கல்வி சேர்க்கையின்போது பிற பல்கலைக்கழகத்தாலும் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்“ என்று சுட்டிக்காட்டினர்.
(கோப்புப்படம்)
இதனை வரவேற்ற அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுமாரசாமி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் இத்தகைய முடிவை நடைமுறைப்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்று அறிக்கையில் குறிப்பிட்டார். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அவரும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஏஐசிடிஇக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் பாலகுருசாமி
இதுபற்றி ‘புதிய தலைமுறை’ இணையதளத்துக்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியிடம் பேசினோம்.
“பொதுவாக படிப்பு என்றால் தேர்வுகள் எழுதியாகவேண்டும். தேர்வே எழுதாமல் மாணவர்கள் தேர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சில தேர்வுகளில் வருகைப்பதிவு, இன்டர்னல் மதிப்பெண்களை வைத்து மதிப்பிடுவது தனிவகை. ஆனால் ஒரு தேர்வில் தோல்வியடைந்த மாணவனை தேர்ச்சிபெற வைப்பதை யுஜிசிகூட செய்யமுடியாது. அரியர் தேர்வுகள் ரத்து என எளிதாக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்துவிட்டார்.
தமிழகத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் 25 லட்சம் மாணவர்கள் படித்துவருகிறார்கள். அதில் 40 அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் உள்ளனர். அவர்கள் தேர்ச்சி என்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது? உயர்படிப்புகளின் கல்வித்தரம் படுபாதாளத்துக்குச் சென்றுவிடும். நாங்கள் படிக்கும் காலத்தில், சில தாள்களில் தோல்வி அடைந்தால் முழு படிப்பையும் மீண்டும் படிக்கவேண்டியிருந்தது.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்
எந்தப் பயிற்சியும் பெறாமல், லேஃப் செல்லாமல் ஒரு மாணவனை தேர்ச்சி செய்வது பொறியியல் கல்வியின் மதிப்பையும் தரத்தையும் கெடுத்துவிடும். நல்ல வேலையும் கிடைக்காது. ஒருவகையில் தமிழ்நாட்டின் மரியாதையே போய்விடும். வேலைவாய்ப்பு அளிக்கும் பெருநிறுவனங்கள் தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களை மதிப்பார்களா?
அரியர் தேர்வு ரத்தை மாணவர்களே ஏற்றுக்கொள்ளக்கூடாது. ‘நாங்கள் தேர்வு எழுதி தேர்ச்சிபெறுகிறோம்’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கவேண்டும். அரியர்ஸ் மன்னனே என்று வாழ்த்தி போஸ்டர் அடிக்கிறார்கள். இதையெல்லாம் எங்கே போய் சொல்வது. மாணவர்களின் மனநிலையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
(கோப்புப் படம்)
உயர்கல்வி விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. பல்கலைக்கழகம்தான் முடிவெடுக்கவேண்டும். அரியர் தேர்வுகளை ரத்து செய்வதால் பல்கலைக்கழகத்தின் பெருமை போய்விடும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழகக் கல்வியின் நிலைமை கேலிக்குரியதாக மாறிவிடும். தேர்வுகளே எழுதாமல் பாஸ் செய்வதற்கு பல்கலைக்கழகங்கள் என்ன ரேஷன் கடைகளா? இனிமேல், எங்களது வழக்கில் நீதிமன்றம்தான் முடிவெடுக்கவேண்டும். நிச்சயம் அரசின் அறிவிப்பு தள்ளுபடியாகும் என நம்புகிறேன்” என்று ஆவேசமாக பேசிமுடித்தார்.