சிறப்புக் களம்

"நாங்கள் இருக்கிறோம் அன்புக் கண்ணா...." நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

"நாங்கள் இருக்கிறோம் அன்புக் கண்ணா...." நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

webteam

சமீபகாலமாக தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விரும்பிய மாணவர்களில் சிலர் தேவையற்ற பதற்றத்தால் தற்கொலை செய்துகொள்வது கவலையளிக்கிறது. தேர்வை எதிர்கொள்வதற்கு முன்பே விரக்தி அடையும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகளை வழங்குகிறார் செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி உளவியல் துறை துணைப் பேராசிரியர் லாவண்யா ஆதிமூலம்...

பெற்றோர்களின் கவனத்திற்கு

என்னால் நிறைவேற்றமுடியாத என் கனவை என் பிள்ளையாவது நிறைவேற்றவேண்டும் எனப் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், கெளரவம் கருதி வழிவழியாக அடுத்த தலைமுறையும் மருத்துவராக வேண்டும் என விரும்புபவர்களும் அதிகம். மருத்துவப் படிப்பின் மீதுள்ள மோகத்தினால் மற்ற துறைகளின் வளர்ச்சியைப் பார்க்க மறுக்கிறார்கள்.

தனது குழந்தையின் விருப்பத்தை என்னவென்று அறியாமல் சமூக அந்தஸ்தை நிலைநிறுத்த நினைக்கிறார்கள். பிள்ளைகளின் யோசிக்கும் திறனை வளரவிடாமல், தனது எண்ணத்திற்கு ஏற்ப நடக்கவேண்டும் என்று அதிக கட்டுப்பாட்டுடன் வழிநடத்தும் பெற்றோர்களும் உண்டு. இப்படி பலவகைப்பட்ட பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அதிக மனஉளைச்சலைத் தருகின்றனர்.

பிள்ளைகள் படும்பாடு

பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடனே கோச்சிங் கிளாஸ், விடுமுறைகளிலும் ஸ்பெஷல் கிளாஸ் என்று வளரிளம் பருவத்தை அனுபவிக்கவிடுவதில்லை. படிப்பு... படிப்பு... என்று திணிப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது. அப்பா, அம்மா, சுற்றம், சமூகம் இவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்ணை எடுக்கவில்லை என்றால், நம்மை எப்படிப் பார்ப்பார்களோ என்ற அச்சம் மாணவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. 

பெற்றோர்கள் தன்னை வெறுத்துவிட்டால், எதற்கும் பிரயோஜனம் இல்லாதவனாக ஆகிவிடுவேன். என்னால் அவர்கள் நினைக்கும் மதிப்பெண் எடுக்கமுடியாது என்று தெரிந்தும் ஊரின் கனவுகளுக்காக ஓடும் பிள்ளைகளை நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது.

அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் நினைத்துவிடுவார்கள், பிறகு பெற்றோர்கள் தன்னை முழுவதுமாக வெறுத்துவிடுவார்கள் என்று மனஅழுத்தம் கொள்கிறார்கள். எதார்த்தமாக தன்னால் முடியாது என்று சொல்லக்கூட அவர்களுக்கு வாய்ப்பில்லை. இந்த கவலைகளைப் பகிர்ந்துகொள்ளவும் யாருமில்லாத நிலை. அதனால்தான் தேர்வை எதிர்கொள்வதைவிட மரணமே மேலானது என்ற நிரந்தர முடிவை எடுக்கிறார்கள்.

லாவண்யா ஆதிமூலம் 

என்ன செய்யலாம்

பெற்றோர்களே சிறுவயதில் நாம் அனைத்திலும் முழு மதிப்பெண் எடுத்து இருக்கிறோமா, அதேபோலத்தான் தம் பிள்ளைகளும் என்ற எண்ணம் வந்தாலே போதும். மாணவர்களின் விருப்பத்திற்கும், திறமைக்கும் ஏற்றவாறு 3 முதல் 5 பாடப்பிரிவுகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பது நல்லது. ஒன்று கிடைக்காவிட்டால் அடுத்த ஒன்று இருக்கிறது என அவர்கள் மனத்தைத் தயார்நிலையில் வைத்திருப்பது நல்லது.

அதிக மதிப்பெண்கள் பெறவில்லை என்றால், வாழ்க்கையே இல்லை என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். பல துறைகள் உண்டு, பல வழிகள் உண்டு என்ற மனத்திடத்தை மாணவர்களுக்கு வழங்கவேண்டியது முக்கியம். பெற்றோர்கள் மட்டுமல்ல, அதற்கு கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் சமூகமும் பொறுப்பேற்கவேண்டும். தோல்வியை மாணவர்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். முயற்சியின் முக்கியத்துவம் அப்போதுதான் அவர்களுக்குப் புரியும். தோல்விகளையும் சவால்களையும் சமாளிக்க அவர்களுக்கு மனதைரியத்தைக் கொடுக்கவேண்டும்.

பெற்றோர்களும் பேரன்டிங் ஸ்டைல் என்னவென்று கவனத்தில் கொள்ளவேண்டும். தனது பெற்றோர்களால் எப்படி நடத்தப்பட்டனரோ, அதேபோல் தங்கள் பிள்ளைகளையும் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. அதிக கட்டுப்பாடு உடைய குழந்தைகள் சவால்களை மேற்கொள்வதில் பின்தங்குகின்றனர். எனவே பெற்றோர்கள் தேவையான இடத்தில் பெற்றவர்களாகவும், அவ்வப்போது நெருக்கமான தோழர்களாகவும் இருக்கவேண்டும்.

எதிர்பார்க்கும் விஷயம் நடக்காவிட்டால் என்ன செய்யலாம், அடுத்த வழி என்னவென்றும் பிள்ளைகளுடன் கலந்து ஆலோசிக்கலாம்.
என்ன நடந்தாலும் உன்னை நாங்கள் வெறுக்கமாட்டோம். நாங்கள் இருக்கிறோம் கண்ணா என்ற தைரியம் கொடுக்கும்போது, எந்த குழந்தையும் சவால்களைச் சமாளிக்க தன் முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள்.

கல்வித் தேர்வு என்பது வாழ்க்கையை மேம்படுத்தவே அன்றி, வாழ்க்கையை முடித்துக்கொள்ள அல்ல என்பதை அவர்களுக்கு அழுத்தமாகப் புரியவைக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். பிள்ளைகளும் அவ்வபோது தனது பெற்றோர்களிடம் அவர்களது மனநிலையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

எப்படி சவால்களைச் சமாளிக்கலாம் என்று ஆசிரியர்கள், சக நண்பர்கள், துறை சார்ந்த நிபுணர்களுடன் வழிமுறைகளை கேட்பதன் மூலம் சவால்களை எளிமையாக சமாளிக்கலாம். அப்படி யாரும் இல்லையென்றால், உளவியல் ஆலோசகர்களை நாடுவது மன விடுதலையைத் தரும். இதுவும் கடந்துபோகும் என்ற எண்ணம் இருந்தால், சவால்களைச் சந்திக்கும் துணிச்சலும் மனப்போக்கும் வந்துவிடும்.