சிறப்புக் களம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை காப்பாற்றிய ’நாம் தமிழர் கட்சி’ வெண்ணிலா!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை காப்பாற்றிய ’நாம் தமிழர் கட்சி’ வெண்ணிலா!

sharpana

இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலமும் தமிழகத்தின் பெருமையுமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு சன் பர்மா மருந்து நிறுவனத்தால் ஏற்பட இருந்த ஆபத்தை நீதிமன்றம்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி பறவைகளைக் காப்பாற்றியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலச் செயலாளர்  வெண்ணிலா.

 “வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகில் செயல்பட்டுவரும்  ‘சன் பார்மா’ மருந்து கம்பெனி தனது தொழிற்சாலையின் எல்லையை விரிவுப்படுத்த தேசிய வனவிலங்கு வாரியத்திடம், கடந்த மே மாதம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், அந்த விரிவாக்கம் வேடந்தாங்கல் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் வருகிறது என்பதால் ’பறவைகளுக்கு ஆபத்து நேரிடும் என்றும் சன் பார்மா நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கக்கூடாது’ என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரிட் மனு தாக்கல் செய்தோம்.  

அந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ‘மருந்து கம்பெனிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது’ என்று கூறியதையொட்டி, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துவிட்டார்கள். ஆனால், மத்திய அரசு வழக்கறிஞர் அனுமதி மறுத்துவிட்டதாக சொன்னது உண்மைதானா? என்று நாங்கள் ஆய்வு செய்தபோது, அப்படி எந்த மறுப்பையும் சொல்லவில்லை. தேசிய வனவிலங்கு வாரியத்திடம்  சன் பார்மா நிறுவனம் வைத்தக் கோரிக்கை இன்னும் காத்திருப்பில்தான் உள்ளது என்று அதிர்ச்சிக்குரிய தகவல் தெரியவந்துள்ளது. மேலும், தமிழக அரசு எப்போதும் இல்லாமல், இப்போது மட்டும் வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோ மீட்டரிலிருந்து 3 கிலோமீட்டராக குறைப்பதாக அறிவித்திருக்கிறது.  நீதிமன்றம் மறுத்தாலும் தமிழக அரசு மூலம் பின்வழியில் நுழையப்பார்க்கும் சன் பார்மா நிறுவனத்தின் திட்டத்தை நிச்சயம்  முறியடிப்போம்” என்று உறுதியுடன் பேசுகிறார், வெண்ணிலா. அவரிடம், வேடந்தாங்கல் பறவைகளுக்கு ஏற்பட இருந்த ஆபத்து என்ன? எப்படி தடுத்து நிறுத்தினீர்கள்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்…

இந்த, சட்டப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

பல்லுயிர் பெருக்கத்திற்கு பறவைகளுக்குத்தான் முக்கிய பங்குண்டு. காடுகள் உருவாவதற்கும் பறவைகளே காரணம். பழங்களின் விதைகளை உண்டு, அதன் கழிவுகள் மூலம் விதைகள் முளைத்து காடுகள் உருவானது என்பதுதான் வரலாறு. பறவைகள் இல்லையென்றால், அந்த இடம் பாலைவனம். வன விலங்குகள் சரணாலயமோ பறவைகள் சரணாலயமோ அமைந்திருந்தால், அந்த இடத்தைச் சுற்றி  வெளி நிறுவனங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக சில கிலோமீட்டர்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக விடுவது சட்ட விதிமுறை.  பறவைகளுக்கு எந்தவித பாதிப்பும் நேராமல் இருக்கவே, இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசும் சன் பார்மா நிறுவனமும் இந்த கட்டுப்பாடுகளை மீறும் விதமாக நடந்துகொள்கின்றன. கடந்த ஜனவரி மாதம் மத்திய சூழலியல் அமைச்சகத்திடம் வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்ட பகுதியை ஐந்து கிலோ மீட்டரிலிருந்து மூன்று கிலோமீட்டராக குறைக்கப்போகிறோம் என்று அனுமதி கேட்டிருந்தது தமிழக அரசு. அன்றிலிருந்து இந்திய அளவில் சூழலியல் ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழக அரசின் இம்முடிவை எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். மருந்து கம்பெனி நீண்ட வருடமாக சரணாலயத்தின் அருகிலேயே செயல்பட்டு வருகிறது. அதன் எல்லைவிரிவாக்கத்திற்கு கடந்த மே மாதம்தான் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி கோரினார்கள். அந்த எல்லை விரிவாக்கம் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில்தான் வருகிறது. இதனை எதிர்த்து முதலில் கடந்த, ஜூன் மாதம் வனத்துறை, சூழலியல் துறை உள்ளிட்ட நான்கு துறைகளுக்கு நாங்கள் புகார் அளித்தோம். ஆனால், அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை என்பதால், ரிட் மனு தாக்கல் செய்தோம். அந்த ரிட் மனுவை நீதிமன்றம் எடுத்துக்கொண்டுதான் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் எங்கள் கட்சி சார்பில் கிட்டத்தட்ட மூன்று வருடமாக சூழலியல் சார்ந்த பணிகளை செய்துகொண்டு வருகிறேன். அதில், வேடந்தாங்கல் போராட்டம்தான் இந்திய அளவில் சூழலியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தப் பிரச்சனை. வேடந்தாங்கல் நம் தமிழ்மண்ணின் பெருமை. முதல் அடி நமதாக இருக்கவேண்டும் என்றுதான் இப்பிரச்னையை எடுத்துக்கொண்டோம்.

அரசு வேடந்தாங்கல் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியைக்  குறைப்பதாகக் கூறியிருக்கும் முடிவின் பின்னணியில் மருந்து நிறுவனம் உள்ளது என்று நினைக்கிறீர்களா? 

 சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட ஐந்து கிலோ மீட்டரில் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த, சரணாலயம்தான் அவர்களின் பிரதானம். பறவைகளுக்கு உணவு கொடுப்பதோடு, அவற்றின் வாழ்வியல் சார்ந்து குடியிருந்து வருகிறார்கள். அவர்களால், பறவைகளுக்கு ஒரு பிரச்னையும் ஏற்படுவதில்லை. இத்தனை ஆண்டுகள் தெருவில் சாலை போடவேண்டும் என்றால்கூட சரணாலயத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுத்துக்கொண்டே வந்திருக்கிறது தமிழக அரசு. பொதுவாகவே பாதுகாக்கப்பட்ட இடங்களில் வாழ்வியல் நடத்தும் மக்களுக்கு தனி விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அப்படியிருக்கும்போது, அரசு அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காகத்தான் பாதுகாக்கப்பட்ட பகுதியை ஐந்து கிலோ மீட்டரிலிருந்து மூன்று  கிலோமீட்டராக குறைக்கிறோம் என கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  ஜனவரியில் தமிழக அரசு சொல்லியபோது எங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், மருந்து கம்பெனியும் அனுமதி கோரியபோதுதான் புரிந்தது. இருவரும் திட்டமிட்டே அனுமதி கோரியிருக்கறார்கள். சரணாயலத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மேம்பாடு, பறவைகளுக்கு உணவு வைப்பது, மரம், செடி, கொடி வைப்பது போன்றவ்ற்றை அரசு செய்யவேண்டும் என்று சட்ட விதிமுறைகளே உள்ளன. மக்கள் பிரச்னைகளை அரசுதான் சரிபடுத்தவேண்டும். இத்தனை ஆண்டுகள் கழித்து ‘கடமையை செய்ய முடியவில்லை. அதற்காக பரப்பளவைக் குறைப்போம்’ என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது, இரண்டு கிலோமீட்டரைக் குறைப்பவர்கள் அடுத்ததாக மீதமிருக்கும் மூன்று கிலோமீட்டரையும் எடுப்பார்கள். இதேபோல், நமது பாதுகாக்கப்பட்ட பகுதிகளை இந்திய அளவில் பறிகொடுத்துவிட்டோம். வேடந்தாங்கலைச் சுற்றி  ஏழு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிலிருந்து வெளிவரும் கழிவுநீர் பறவைகள் வனப்பகுதியில்தான் கலக்கின்றன. இந்த வழக்கு தமிழக அரசு சரணாலயத்தை குறைப்பது குறித்தது அல்ல. சன் பார்மா நிறுவனத்தின் எல்லை விரிவாக்கத்துக்கு எதிராகத்தான் போட்டிருந்தோம். ஆனால், மாநில அரசு சார்பில் வந்த வழக்கறிஞர் சம்பந்தமே இல்லாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்தப் பதிலை அங்குவந்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே?

 சன் பார்மா மருந்து நிறுவனத்தால் சரணாலயத்திற்கு என்ன மாதிரியான ஆபத்துகள் வரும்?

பல சூழலியல் ஆர்வலர்கள் வேடந்தாங்கலுக்குச் சென்று பல வருடங்களாக, அங்குள்ள வனப்பகுதி நீரையும் காற்றையும் ஆய்வுசெய்து வருகிறார்கள். அந்த நீரில் நான்கு வகையான கெமிக்கல்கள் கலந்துள்ளதாக கண்டறிந்துள்ளார்கள். இவை, எல்லாமே அந்த ஏழு நிறுவனங்களின் கழிவுகள்தான். இதனால், பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பறவைகள் வருவதற்கு செடி, மரம், கொடி போன்றவற்றை வளர்த்துக்கொண்டே வரவேண்டும். ஆனால், அரசு அப்படி எதுவும் செய்யவில்லை. இதனால், சரணாலயத்தில் பறவைகளின் வரவும் வாழ்வும் பாதிக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே, நிலைமை இப்படி இருக்கும்போது சன் பார்மா கம்பெனிக்கு குறைக்கப்பட்ட இரண்டு கில்லோமீட்டரை தமிழக அரசு கொடுத்துவிட்டால் பறவைகளுக்கு இன்னும் பேராபத்துதான்.

 அரசின் இந்த முடிவுக்கு உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? 

 அரசின் இந்த முடிவை எதிர்த்து சட்டப்போராட்டமும் மக்கள்  போராட்டமும் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். கடுமையாக எதிர்ப்போம். சூழலியல் ஆர்வலரான என்னால், இந்த பேராபத்தை அனுமதிக்க முடியாது.  நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை இதனைப் பார்த்துக்கொண்டிருக்காது.

மருந்து நிறுவனத்திடமிருந்து… ப்ளாக் மெயில்… பேரங்கள்… ஏதாவது வந்ததா?

அப்படி எதுவும்  இல்லை. அரசின் தரப்பிலிருந்தும் யாரும் இதுவரை பேசவில்லை. வழக்குகளை இணைய வழியாகத்தான் விசாரிக்கிறது நீதிமன்றம். அதனால், பலபேருக்கு இப்பிரச்சனை குறித்து தெரியவில்லை. ஏற்கெனவே, இரண்டு வழக்குகள் அரசின் எல்லை விரிவாக்கத்திற்கு எதிராக போடப்பட்டுள்ளது. ஆனால், அவை பசுமைத் தீர்ப்பாயத்தில் இருப்பதால் எதுவும் செய்யமுடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. நாங்கள்தான் மருந்து கம்பெனியை எதிர்த்து பொதுநல வழக்குப் போட்டோம்.

 உங்கள் குடும்பப்பின்னணி?

 என்னுடைய சொந்த ஊர் தேவக்கோட்டை. தற்போது, கணவருடன் சென்னையில் வசித்து வருகிறேன். எனக்கு சிறுவயதிலிருந்தே சுற்றுச்சூழல் மேல் ஆர்வம் அதிகம். அதனால்தான், படிப்பையும் ஆய்வுகளையும் அதனைத்தொடர்ந்தே செய்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் உயிரி தொழில்நுட்பவியலும், குப்பை மேலாண்மையில் ஆறுவருட ஆய்வும் செய்துள்ளேன்.

தமிழகத்தில் அத்தனைக் கட்சிகள் இருக்கும்போது நாம் தமிழர் கட்சியில் எப்படி இணைந்தீர்கள்?

 என்னுடைய அம்மாவின் குடும்பம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்தக் குடும்பம். ஈழப்பிரச்சனை என்னுடைய சொந்தப்பிரச்சனை. எங்களின் இனப்படுகொலைக்கு எதிராக நாம் தமிழர் கட்சிதான் தீவிரமாக செயல்பட்டு வந்தது. அண்ணன் சீமான் அரசியல் ஆசான் என்பதைவிட சூழலியல் ஆர்வலர். அவர், பேசுவதெல்லாம் மண்ணையும் இயற்கை வளத்தையும் நேசிப்பது குறித்தே இருக்கும். மேலும், எனக்கு  100 சதவீதம் சுதந்திரம், எங்கள் கட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பிரச்சனைக்கு நாம் தமிழர் கட்சிதான் வழக்கு போட்டது. ’எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நம் மண்ணின் பெருமையை நாம்தான் காக்கவேண்டும். நான் செலவு செய்கிறேன். நீங்கள் சட்டரீதியாக வெற்றிபெறுங்கள்’ என்று முழு ஆதரவையும் கொடுத்து ஊக்கப்படுத்தினார், அண்ணன் சீமான். வேடந்தாங்கல் பிரச்னையை தமிழகத்தில் முதன்முதலில் கையில் எடுத்தது எங்கள் கட்சிதான்.

எதிர்கட்சிகள் ஆதரவு கொடுத்தார்களா?

 எந்த எதிர்க்கட்சிகளும் இப்பிரச்சனைக்கு வாய் திறக்கவே இல்லை. அண்ணன் திருமாவளவன், அண்ணன் வேல்முருகன் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்போது நாங்களும் சேர்ந்துகொள்கிறோம். ஆனால், அவர்கள் இப்பிரச்னை குறித்து எதுவும் பேசவில்லை. ’இங்கு இப்படி நடப்பது தெரியுமா?’ என்று அவர்களை எழுப்பித்தான் கேட்கவேண்டும்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான நீங்கள், இதற்குமுன் தொடுத்த வழக்குகள் என்னென்ன?

 ’வனம் செய்வோம்’ அறக்கட்டளையை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மூலம் ஆரம்பித்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.மேலும், எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் செய்தது, கல்குவாரிகள் அகற்றக் கோரியும் நீர்நிலைகளை சரிசெய்யவும் வழக்குகள் தொடுத்திருக்கிறோம். சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், பிரான்மலை குவாரி குடைவது குறித்தும் சட்டரீதியாக அணுக முடிவு செய்துள்ளோம். சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுடன் எட்டுவழிச்சாலைக்கு எதிராகவும் ஏர்போர்ட் விரிவாக்கத்தையும் கைவிடக்கோரியும் நாங்கள்தான் வழக்குப் போட்டோம்

சுற்றுச்சூழல் தொடர்பாக தமிழக அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

நிறைய இருக்கிறது. அதில், முக்கியமானது தண்ணீர் பிரச்னைதான். ஒவ்வொரு கோடைகாலத்திலும் தண்ணீர் பிரச்னை வந்துவிடுகிறது. மாநிலம் முழுக்கவே வெள்ள மீட்டுருவாக்கம் செய்யவேண்டும். நீரை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றவேண்டும். மக்கும் குப்பைகளை தரமாக எடுத்து பிரித்தால் நிறைய நல்ல விஷங்கள் நடக்கும். நம் எதிர்கால தலைமுறைக்கு சூழலியல் பாதுகாத்து வைக்கப்படவேண்டும். சூழலியல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையானது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பல்லூர் பெருக்கத்திற்கான இடம். ஆனால், அதனை குப்பைக்காடகவே மாற்றிவிட்டார்கள். இவையெல்லாம அரசு சரிசெய்வதோடு மட்டுமல்லாமல் குறிப்பாக, மத்திய அரசிடமும் கார்ப்பரேட் நிறுனங்களிடமும் விலைபோகக்கூடாது.

- வினி சர்பனா