ஒரு வட மாநிலத்தை சேர்ந்தவனாக சென்னையில் இருந்த இரண்டரை ஆண்டுகள் குறித்து அபய் ஜனி என்பவர் தன் அனுபவங்களை நெகிச்சியாக பகிர்ந்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் அபய் ஜனி, அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளார். இப்போது மீண்டும் சென்னையை விட்டு வேலைக்காக குருகிராம் செல்கிறார். தான் சென்னையை விட்டு பிரிவதற்கு முன்பு தன் அனுபவங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அபய் ஜனி.
அதில் அவர், “இந்தியாவின் மற்ற மாநகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் எல்லாமே மலிவுதான். முக்கியமாக நல்ல உணவு, வீட்டு வாடகை, பயணிப்பது. மின்சார ரயிலில் வெறும் ரூ.20-க்கு 45 கி.மீ. பயணித்து இருக்கிறேன், அதுவும் 1 மணி நேரத்தில். மதிய உணவு, இரவு உணவுகளான தோசை, இட்லி அனைத்தும் ரூ.100க்குள் கிடைத்துவிடும், அதுவும் நல்ல உணவகங்களில்” என்கிறார் அபய் ஜனி.
மொழிப் பிரச்னை குறித்து பதிவிட்டுள்ள அபய் ஜனி, “எனக்கு தமிழில் "தமிழ் தெரியாதா" என்ற வார்த்தையை தவிர வேறு ஏதும் தெரியாது. அப்படியிருந்தும் நான் ஒரு பிரச்னையையும் சந்தித்ததில்லை. பலர் எனக்கு உதவியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் தெரியும். எப்படியும் எனக்கு உதவி கிடைத்துவிடும்” என்கிறார்.
சென்னை கலாசாரத்தை பற்றி சிலாகித்துள்ள அபய் ஜனி, இவ்வாறு பதிவிட்டிருக்கிறார், “சென்னையில் திரைப்படங்களும், அரசியலும் இங்கு வாழும் ஒவ்வொருவரின் இதயத்திலும் கலந்திருக்கிறது. அதில் மட்டும் தலையிடாதீர்கள், அதனால் சிலர் மனக் காயம் அடையலாம்” என கூறியுள்ளார்.
சென்னை மக்கள் குறித்து குறிப்பிட்ட அபய் ஜனி, “சென்னை மக்களுக்கு சூப்பர் என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும். நீங்கள் இந்த ஊருக்கு புதிதாக இருந்தால் "சூப்பர்" என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள், உங்களை தங்களில் ஒருவராக கொண்டாடுவார்கள். ஒட்டுமொத்தமாக இந்த ஊரில் இருந்தது மறக்க முடியாத நாள்கள், என் வாழ்வில் எப்போதும் சென்னையில் இருந்த நாள்களை நினைவுகளில் அசைபோடுவேன். கலாசாரத்தை சென்னையில் கற்றுக்கொண்டேன், இங்கு கலாசாரம் ஆழமானது, ஆத்மார்த்தமானது. குட் பை நம்ம சென்னை” என தன் பதிவை முடித்து குர்கானுக்கு கிளம்பினார். நாமும் சொல்லலாம் சென்று வாருங்கள் அபய்.