சிறப்புக் களம்

திருக்குறள் 'சம்பவம்', அச்சில் அரிய நூல்கள்... பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ப் பணிகள்!

திருக்குறள் 'சம்பவம்', அச்சில் அரிய நூல்கள்... பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ப் பணிகள்!

Veeramani

அழியும் நிலையிலிருந்த பல்வேறு தமிழ்நூல்களை பதிப்பிக்கவும், தமிழறிஞர்களின் தமிழ்ப்பணிக்கு உதவும் பொருட்டும் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவர் நினைவுநாள் இன்று...

பாண்டித்துரைத் தேவர் 1867 ஆம் ஆண்டு மார்ச் 21-இல் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது 17-வது வயதில் பாலவநத்தம் ஜமீன் அரசர் பொறுப்பையேற்றார். இவருக்கு புலவர் அழகர் ராஜா, தமிழும், வக்கீல் வெங்கடேஸ்வர சாஸ்திரி ஆங்கிலமும் கற்றுத் தந்தனர்.

தமிழ்மொழியில் ஆழ்ந்த பற்றும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டிருந்த பாண்டித்துரைத் தேவரிடம் திருக்குறளில் பல இடங்களில் எதுகை, மோனை சரியாக அமையவில்லை என்றும், அதையெல்லாம் திருத்தி எழுதி சரியான திருக்குறளை அச்சிட்டிருப்பதாக ஒரு ஆங்கிலேய பாதிரியார் கூறினார்.

திருக்குறளைப் புரிந்துகொள்ளாத அவரது அறிவீனத்தை உணர்ந்து,  தவறான நூல்கள் பரவாத வகையில் உடனே அவரிடமிருந்து அச்சிடப்பட்ட நூல்கள், கையெழுத்துப் பிரதி அனைத்தையும் விலைகொடுத்து வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியவர் பாண்டித்துரைத் தேவர்.

ஒருசமயம் ஆய்வுக் கட்டுரைக்காக பாண்டித்துரைதேவர் திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை பெற முயற்சித்தபோது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளிலிருந்தும்கூட இந்நூல்களை பெற முடியவில்லை. இந்நிகழ்வு தேவரின் உள்ளத்தை மிக கடுமையாகப் பாதித்தது.  இதனால் வேதனையடைந்த இவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்டார். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், பாண்டித்துரைத் தேவரின் தலைமையில் மதுரையில் 1901-ல் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது.

தமிழகம் மற்றும் ஈழத்தை சேர்ந்த  ஏராளமான தமிழறிஞர்கள் இந்த தமிழ்ச்சங்க தொடக்க விழாவில் பங்கேற்றனர். இது ‘நான்காம் தமிழ்ச் சங்கம்’ என வரலாற்றில் முத்திரை பதித்தது. அதன்பின்னர் ஆறுமுக நாவலரின் உதவியோடு பல அரிய நூல்களை ஏட்டுச்சுவடிகளிலிருந்து அச்சில் பதிப்பித்தார்.

சிங்காரவேலு முதலியார் சேர்த்து வைத்திருந்த கலைக்களஞ்சிய அகராதிக்கான தகவல்களைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிட  பெரும் பொருளுதவி செய்தார். தேவாரத் திருமுறைப் பதிப்புகள், சிவஞான ஸ்வாமி பிரபந்தத் திரட்டு, சிச்சமவாதவுரை மறுப்பு உள்ளிட்ட நூல்களை வெளியிடச் செய்தார். பன்னூற்றிரட்டு, சைவ மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார். இவர் இயற்றிய காவடிச் சிந்து மிகவும் புகழ் வாய்ந்தது.

அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைக் கண்டெடுத்து, அவை அழியா வண்ணம் அச்சிட்டு வந்த உ.வே.சா-விற்கு உதவும் பொருட்டு  அவரை ராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார். தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும் வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த பாண்டித்துரைத் தேவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. குறுகிய கால வாழ்நாளுக்குள் பைந்தமிழ் வளர்ச்சிக்கு அசாத்தியமான பங்களிப்பை வழங்கிய பாண்டித்துரைத் தேவர் 1911-ம் ஆண்டு  தனது 44-வது வயதில் மறைந்தார்.

- வீரமணி சுந்தரசோழன்