ஈரோடு நகரில் உள்ள ஈ.கே.எம். அப்துல்கனி மதரஸா இஸ்லாமியா அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் பி. மூசா ராஜா ஜுனைதிக்கு ஊரடங்கு காலத்திலும் ஓய்வு என்பதே கிடையாது. இந்த காலக்கட்டத்தில், பள்ளியில் 720 மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி கையேடுகளை வழங்கியுள்ளார். மேலும், 300 ஏழை மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்களை அளித்திருக்கும் ஆசிரியர் மூசா ராஜா, தன் ஆசிரியப் பணி அனுபவங்களை புதிய தலைமுறை இணையதளத்துக்காகப் பகிர்ந்துகொண்டார்.
“அது 2000. ஈரோட்டில் உள்ள ஈ.கே.எம். அப்துல்கனி மதரஸா இஸ்லாமியா ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். மாணவர்களைச் சந்திப்பதும், அவர்களுடைய நிலையறிந்து கற்பிப்பதும் பிடித்தமான பணியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவங்களின் வாசல் கதவுகள் திறந்துகொண்டிருந்தன. மாணவர்களுக்கு ஆசிரியர்தான் கற்பிக்கிறார் ஆனால் மறுபக்கம் மாணவர்களிடம் இருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம்.
கற்றல் இனிமை
புதிய செய்திகள், கதைகள், நானே எழுதிய பாடல்கள், கவிதைகள் மூலம் ஆர்வத்துடன் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கினேன். மாணவர்களின் மனநிலை அறிந்து பாடங்களை நடத்தினேன். கற்றல் இனிமை என்பதை முழுமையாக நான் உணர்ந்திருந்தேன். அந்த அனுபவங்களை மாதாந்திர பயிற்சி முகாமில் மற்ற ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டேன். அதில் எனக்கு பாராட்டுகள் கிடைத்தன.
பள்ளியின் முன்னேற்றம் என்பது ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. நேரம் காலம் பார்த்து வேலை செய்தால் இலக்குகளை அடையமுடியாது. களிமண்ணை சிற்பம் ஆக்குவதும் வெறும் மண்ணாக ஆக்குவதும் ஆசிரியர்களின் உழைப்பில்தான் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படும்போது, மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதை அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன். 540 மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளியில் இப்போது 720 பேர் படிப்பதற்கு அதுவே காரணம்.
(தலைமை ஆசிரியர் மூசா ராஜா ஜூனைதி)
சில ஆண்டுகள் எஸ்எஸ்ஏ கருத்தாய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியபோது ஆசிரியர்களை வழிநடத்திய அனுபவம் மறக்கமுடியாதது. இதுதொடர்பான சிகரம் தொடும் ஆசிரியர்கள் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன். பின்னர் அதே போட்டியில் மாநில அளவில் நான்காம் இடமும் கிடைத்தது. ஆர்வமே எனக்கான அனைத்து உயரங்களுக்கும் ஆணிவேராக இருக்கிறது.
மாற்றங்கள்
பள்ளியில் கற்றல் துணைக்கருவிகளில் பல புதுமைகளைச் செய்தேன். கரும்பலகையைத் தாண்டிய கல்வியை மாணவர்களுக்கு அளிக்க விரும்பினேன். அதற்காக தமிழக அரசின் புதுமை ஆசிரியர் விருது எனக்குக் கிடைத்தது. எங்கள் பள்ளியில் வகுப்பறைகள் வசதியின்றி பலகைகளால் பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு வகுப்பில் பாடம் நடத்தினால், மற்ற வகுப்புகளில் சத்தம் கேட்கும். 2006ம் ஆண்டில் தனித்தனியாக ஆறு வகுப்பறைகளை கட்டினோம். அடுத்து தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஐந்து புதிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.
சின்னச் சின்ன வசதிகளால் மேம்பட்டு எங்கள் பள்ளி ஒரு நவீன கல்விநிலையமாக காட்சியளிக்கிறது. தலைமையாசிரியர் அறை, அனைத்து வகுப்புகளுக்கும் கேட்கும் இன்டர்காம் வசதி, மைதானம், சுற்றுச்சுவர், சிசிடிவி கேமராக்கள், ஸ்மார்ட் கிளாஸ், வகுப்பறைகளில் குழந்தைகளைக் கவரும் வண்ணப்படங்கள், கணினி மையம் என பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் பள்ளி வளர்ச்சியை அடைந்துகொண்டே இருக்கிறது.
சமூகத்தொடர்பு
பெற்றோர் மற்றும் சமூகத்துடன் சிறப்பான தொடர்பு இருப்பதன் காரணமாக நன்கொடை பெற்று பள்ளியில் பல வசதிகளைச் செய்யமுடித்தது. பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் 540 மாணவர்கள், 2019 ஆம் ஆண்டில் 620 மாணவர்கள் ஒரே கல்வியாண்டில் மட்டும் 80 குழந்தைகள் கூடுதலாக சேர்ந்துள்ளார்கள்.
மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, அறிவியல் கண்காட்சிகள், பெண்களுக்கான மருத்துவ முகாம், கண் மருத்துவமுகாம், மரக்கன்று நடுதல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்துவந்திருக்கிறோம். காய்கறித் தோட்டம் அமைத்து அங்கு விளையும் காய்கறிகளை சத்துணவுக்குப் பயன்படுத்தி வருகிறோம்.
ஊரடங்கு காலத்தில்…
ஜூன் மாதம் முதல் தற்போது வரை வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர்களைக் கொண்டு பாடம் சார்ந்த வீடியோக்கள், யூ டியூப் லிங்க்ஸ், வீட்டுப்பாடங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கிவருகிறோம்.
எங்கள் பள்ளி மாணவர்களுக்கு டை, பெல்ட், டைரி, அடையாள அட்டை, மின் விசிறிகள் கொண்ட வகுப்பறைகள், சுகாதாரமான கழிப்பறைகள் என கூடுதல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் ஒரு சனிக்கிழமையில் ஆசிரியர்கள் மட்டும் கூடி மாணவர்களின் ஆங்கிலம் மற்றும் கற்றல் திறன்களை அதிகப்படுத்த கலந்துரையாடல் செய்துவந்தோம். மீண்டும் பள்ளி திறக்கும்போது அனைத்துப் பணிகளும் தொடரும்.
வாரத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு புக் ஃப்ரி டே என்ற பெயரில் கலைகள், விளையாட்டு, சிறுவர்களுக்கான திரைப்படம் மற்றும் துணைக் கருவிகள் செய்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், கணித மற்றும் அறிவியல் மன்றம், கலை மற்றும் மனமகிழ் மன்றம் மூலம் மாணவர்களின் திறமைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவிகளுக்கு பாலினம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அங்கீகாரங்கள்
2012ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரால் சிறந்த பள்ளிக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. பலமுறை மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளியைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். சிறந்த பள்ளி, சிறந்த ஆசிரியர் என்ற அங்கீகாரங்களை பல்வேறு அமைப்புகள் மூலம் அவ்வப்போது பெற்றுவருவது உற்சாகம் அளிக்கிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக பள்ளிக்கு ஏ கிரேடு வழங்கப்பட்டது கூடுதல் பெருமை.
எதிர்காலத் தேவைகள்
யூடியூப் சேனல்போல எஜூகேஷனல் டியூப் ஒன்று வரவேண்டும். அதில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்பட கல்வியுடன் தொடர்புடையவர்களின் படைப்புகள் இடம்பெற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு வாகன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் கூடுதலாக கணினிகள் மற்றும் இணையதள வசதிகள்வேண்டும்” என்கிறார் ஆசிரியர் மூசா ராஜா ஜூனைதி.