பிளாஸ்டிக்கிற்கு (நெகிழி) அடுத்தாண்டு முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பாகவே சூழல் ஆர்வலர்களிடையே பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியான விழிப்புணர்வு, மறுசுழற்சியில் நவீன தொழில்நுட்பம் என அரசு சார்பில் நெகிழி ஒழிப்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மூலமாக 20ஆண்டுகால பழக்கத்தை அடுத்த 6 மாதங்களில் நிச்சயமாக மாற்றம் கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழியை தடை செய்வதே அவசியம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நெகிழி தடை என்பதற்கான சரியான புரிதல் முதலில் தேவைப்படுகிறது. POLY PROPYLENE (PP), POLY ETHYLENE (PE), POLY VINYL CHLORIDE (PVC), Polyethylene terephthalate (PET) என நான்கு வேதியியல் பொருட்களில் பிரித்தெடுக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்தே பெரும்பாலும் நெகிழி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதில், POLY PROPYLENE (PP) எனப்படும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் LOW DENSITY POLY ETHYLENE (LDPE) மூலமாக தயாரிக்கப்படும் "SINGLE USE"அதாவது ஒருமுறை உபயோகிக்கும் நெகிழி பொருட்களே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகும். CARRY BAGS, CUP, PLATE, SPOON, STRAW ஆகிய பொருட்கள் இந்த SINGLE USE PILASTIC ரகத்தில் வருபவையாகும். நீர், நிலம் ஆகிய சூழலுக்கு மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்துவதும் இந்த வகையான நெகிழி பொருட்களே ஆகும். நெகிழி இல்லாத தமிழகம் என்பது சரியாகாது என்றும், நெகிழி இல்லாத சமூகம் என்பது தற்போது சாத்தியமில்லை என்றாலும், நெகிழி மிக சிறந்த மாற்றுப்பொருட்கள் எனவும் கூறுகின்றனர் நெகிழியை ஆய்வு செய்தவர்கள். நெகிழி மாற்றாக போனால், மரப்பொருட்கள், எக்கு உள்ளிட்ட உலோக பொருட்கள் பயன்பாடு அதிகரிக்கும். அப்போது, இயற்கைக்கு ஆதாரமான மரம் வெட்டப்படுவதும், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதும், காற்று மாசு அதிகரிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே, நெகிழி ஒழிப்பு என்பது ஒருமுறை பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழியை தடை செய்ய வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும் என்கின்றனர்.
மொத்த குப்பைகளில் 20 சதவிகிதம் மட்டுமே மிகுந்த சவாலானது
தமிழகத்தை பொருத்தவரை திடக்கழிவு மேலாண்மையில், 60 முதல் 70 சதவிகிதம் ஈரமான கழிவுகள் (WET WASTE ) எனப்படும் உணவுப் பொருட்கள் கழிவுகளும், 20சதவிகிதம் DRY WASTE எனப்படும் உலர்ந்தக்கழிவுகளும், மீத 20 சதவிகிதம் HAZARDOUS WASTE எனப்படும் மின், கட்டிட, குப்பை என அபாயகரமான கழிவுகள் நகராட்சிகளில் சேகரிக்கப்படுகிறது. இதில், 20 சதவிகிதமான DRY WASTE எனப்படும் உலர்ந்தக்கழிவுகளில், 60 சதவிகிதம் காகித கழிவுகளும், 20 சதவிகிதம் மறுசுழற்சி செய்யக்கூடிய நெகிழி உள்ளிட்ட பொருட்களாகும், மீதம் உள்ள 20சதவிகிதம் தான் நம் முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகள் ஆகும். காரணம், சுற்றுச்சூழலை அதிகளவு பாதிக்கும் SINGLE USE நெகிழி பொருட்களான உணவகங்களில், கடைகளில் வழங்கப்படும் நெகிழி பொருட்கள் இந்த வகைகளில் வருகிறது. சாம்பார், சட்னி என உணவு பொருட்களை பார்சலில் கட்டி கொடுப்பதிலிருந்து, கடைகளில் வாங்கப்படும் ஷாம்பூ உள்ளிட்ட சிறிய பொருட்கள் தான் சுற்றுசூழலை அதிகளவு பாதித்து வருகிறது.
சேகரிப்பதிலும், சுத்திகரிப்பதிலும் மிகப்பெரிய சவால் உள்ளதால், இவ்வகை நெகிழி பொருட்கள் எளிதாக நீர், நிலைகளில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. எனவே, பாரம்பரிய முறைக்கு நாம் மாறுவதே இதற்கு தீர்வாகும்.
விற்பனைக்கு மட்டுமின்றி தயாரிப்பதற்கு தடை என்பது நெகிழி தடைக்கு நம்பிக்கை அளிக்கிறது
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நெகிழி பொருட்களுக்கு தடை என பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்தாலும், அதன் பயன்பாட்டை தடுக்க முடியவில்லை. என்ன தான் தடை என்றாலும், அதன் உற்பத்தி இருந்து வந்தே இருந்தது. ஆனால், தற்போது அதன் தயாரிப்பை தடுத்து நிறுத்துவது என்பதால் வெற்று அறிவிப்பாக மட்டுமில்லாமல், சுற்றுசூழலை பாதிக்கும் நெகிழி தடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை சூழல் ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அரசின் முன் உள்ள சவால்கள் ? செய்ய வேண்டியவை ....
6 மாத கால அவகாசம் என்பது மாற்றுப்பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான காலமாக இதை எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, கேரளாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். SHREEDING MACHINE என்ற கருவியை நகராட்சிகள் அனைத்திலும் அமைத்து, சேகரிக்கப்படும் நெகிழி கழிவுகள் அனைத்தையும் இந்த கருவி மூலம் மிக சிறிய துண்டுகளாக வெட்டி சாலை போடுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், அந்த கருவியை நிறுவுவதற்கும், பராமரிப்பதற்கும் செலவழிக்கப்படுகிறது. இதனால், அரசின் வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ளது போல், ஆங்காங்கே குப்பைகள் பெரும் நிலையம், அதை அறிந்துக்கொள்ளும் வகையில் மொபைல் செயலி போன்ற நவீன தொழில்நுட்பத்தை கொண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதுமட்டுமின்றி, தடை செய்யப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருட்களை உருவாக்குவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராமப்புற பெண்கள், இளைஞர்களை பணிக்கு அமர்த்தும் போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். குறிப்பாக, பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இதற்கு தேவை என்பதால் அவர்களை தொடர்ந்து ஈடுபடுத்தவும், ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். CORPORATE SOCIAL RESPONSIBILITY போல் CITIZEN SOCIAL RESPONSIBILITY என்பதை ஏற்படுத்த வேண்டும்.
சமீபத்தில் இந்தியாவில் முதல் முறையாக கோவை மாநகராட்சியில் நெகிழியை போலவே காணப்படும் பயோ பேக் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இயற்கை முறையிலான பைகள், மஞ்சப்பை, கட்டைப்பை போன்ற நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த துணி பைகளை கடைகளில் வழங்கவும், பொதுமக்கள் கொண்டு செல்லவும் இதற்கு தீர்வாகும். மேலும், வாழை, தென்னை நார்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், பாக்கு மட்டை பொருட்கள் என இயற்கை முறையிலான பொருட்கள் சந்தையில் கிடைப்பதை அதிகரிக்கவும், பொதுமக்கள் அதனை எளிதாக பெறும் வகையில் விற்பனைக்கு கொண்டு வரவும் வேண்டும்.
நெகிழி தடை அந்த தொழிலில் ஈடுபட்டவர்களை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர் கோவை குடியிருப்பு வாசிகள் நலச்சங்கங்கள். தற்போதுள்ள தொழிற்சாலை கட்டமைப்பிலேயே மாற்றுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளலாம் என்று கோவையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது தெரியவந்ததாக உறுதிபடத் தெரிவிக்கின்றனர். நெகிழி மாற்று பொருட்களின் விலை ஆரம்பத்தில் சற்று அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் பயன்பாடு அதிகரிக்கும் போது நாளடைவில் விலை குறையவும் வாய்ப்புள்ளது. மேலும், நான் ஓவன் வகைகள் மற்றும் தெர்மாகோல் பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதால் அந்த வகையான பொருட்களும் இந்த தடையில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர்.
ஐஸ்வர்யா -கோவை