கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பலரும் வாட்டி வதைக்கும் வெப்பத்தை சமாளிக்க அதிக நீரினை பருகுவது தொடங்கி பல்வேறு வழிகளை கடைபிடித்து வருவதுண்டு. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சர்தானா (Sarthana) இயற்கை பூங்காவில் வாழ்ந்து வரும் விலங்குகள் வெப்பத்தை உணர தொடங்கி வருகின்றன.
விலங்குகள் கோடையை சமாளிக்கும் நோக்கில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது பூங்கா நிர்வாகம். விலங்குகளுக்கு நீர் சத்தும் அதிகம் நிறைந்து உணவுகள், பழங்கள் மற்றும் கோடை கால சிறப்பு உணவுகளும் வழங்க தொடங்கியுள்ளனர்.
அதோடு தண்ணீர் தெளிப்பான்கள், கூலர்ஸ், தண்ணீர் தொட்டி மாதிரியான ஏற்பாடுகளும் கோடையை முன்னிட்டு பூங்காவில் விலங்குகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. புலி, சிங்கம், கரடி மாதிரியான விலங்குகளுக்கு அதன் வசிப்பிடத்தில் பிரத்யேக நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
பூங்காவில் மரங்கள் நிறைந்திருப்பதால் வெப்பத்தின் அளவு சற்று குறைவாக இருப்பதாகவே உணரப்படுகிறதாம். இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பூங்காவில் 20 வகையான விலங்குகள், 16 வகையான பறவை இனங்கள் மற்றும் 5 வகையான ஊர்வன இனங்கள் உள்ளனவாம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 டிகிரி வெப்பம் அந்த பகுதியில் பதிவாகி இருந்ததாம்.