காட்டுத்தீயினால் ஏற்படும் புகை ஓசோன் படலத்தினை அழிக்கவல்லது என கனடாவில் அமைந்துள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மாறிவரும் காலநிலை மாற்றத்தின் விளைவு காரணமாக அவ்வப்போது ஏற்பட்டு வரும் காட்டுத்தீயினால் சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் (அல்ட்ரா வயலட் ரேஸ்) நேரடியாக பூமியின் மீது விழும் சூழல் உருவாகும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆய்வு ‘சயின்ஸ்’ என ஆய்விதழில் வெளியாகி உள்ளது. பூமியின் வளிமண்டல அடுக்குகளின் ஒரு பகுதியாக உள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களை ஈர்த்து வருகிறது. இதற்காக கனடாவின் விண்வெளி முகமை நிலைநிறுத்தி உள்ள செயற்கைக்கோளான Atmospheric Chemistry Experiment சாட்டிலைட் மூலம் கிடைத்த தரவுகளை பயன்படுத்தி உள்ளனர் ஆய்வாளர்கள். வளிமண்டலத்தில் புகையின் தாக்கம் எப்படி உள்ளது என்பதை கணக்கிடும் பணியை இந்த சாட்டிலைட் மேற்கொண்டு வருகிறது.
ஆஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அமேசான் காடுகள் அமைந்துள்ள பிரேசில், பெரு, பொலிவியா, பராகுவே மாதிரியான நாடுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கேரளா மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளிலும் அண்மையில் காட்டுத்தீ ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆஸ்திரேலிய காட்டுத்தீயினால் வெளியேறியே புகைகள் அமிலத்தன்மை மிக்கதாக இருந்ததாகவும். அது வளிமண்டலத்தில் இருக்கும் குளோரின், ஹைட்ரஜன், நைட்ரஜன் கெமிஸ்ட்ரியை சிதைத்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.