சுற்றுச்சூழல்

பூமிக்கு கேடாகும் நெகிழிக் குப்பைகள்.. அமலுக்கு வந்தது தடை உத்தரவு

பூமிக்கு கேடாகும் நெகிழிக் குப்பைகள்.. அமலுக்கு வந்தது தடை உத்தரவு

Sinekadhara

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் நெகிழி கழிவுகளை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் அவ்வப்போது ஆழ்கடலுக்குச்சென்று அங்கு சேகரமாகும் நெகிழி கழிவுகளை சுத்தம் செய்துவருகிறார்கள். முகக்கவசம், நெகிழி பாட்டில்கள் என கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் தரும் குப்பைகள், கடலுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே கேடாகத்தான் அமைகின்றன. இதேபோல, அலட்சியமாக வீசி எறியப்படும் நெகிழி கழிவுகள், மாடுகள் உள்ளிட்ட உயிரினங்களின் உயிருக்கே உலை வைக்கின்றன. இதுகுறித்த தனது அனுபவத்தை பகிர்கிறார் உதகையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் இயற்கையை காக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் நெகிழிகளுக்கான தடை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கடைகளில் இந்த மாற்றத்தை காணமுடிகிறது.

2020 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட மலை பிரதேசங்களில் 16 விதமான நெகிழி பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொடைக்கானல், ஊட்டியில்பெருமளவு நெகிழி கட்டுப்படுத்தப்பட்டாலும் ஏற்காட்டில் நெகிழி கட்டுப்பாடுகள் சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை எனக்கூறப்படுகிறது. இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியக்கூடிய நெகிழிகள் ஆண்டுக்கு 2.4 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தியாகின்றன. டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு ஆயிரத்து 60 டன் அளவுக்கு நெகிழி குப்பைகள் சேகரமாகின்றன. இதில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிகள் 5.6 சதவிகிதம் அளவுக்கு இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிகளுக்கான தடை நாடு முழுவதும் ஜூலை ஒன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துறை, நெகிழிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-ன்படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.