பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் இடம்பெறாத நிலையில், அங்கு 10 எண்ணெய்க் கிணறுகளை தோண்ட அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அண்மையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே கருக்காகுறிச்சி வடதெரு கிராமத்தில் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு மீண்டும் சர்வதேச அழைப்பாணை விடுத்ததற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதிகளை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது என முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அரியலூரில் 10 எண்ணெய்க் கிணறுகளை தோண்ட அனுமதி கேட்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவேண்டும் என விண்ணப்பத்தில் ஓஎன்ஜிசி குறிப்பிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.