வேகமான மக்கள்தொகை அதிகரிப்பு, உணவு மற்றும் நீர் கிடைக்காத சூழல் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக 2050-ஆம் ஆண்டிற்குள் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயரும் ஆபத்து உருவாகும் என்று புதிய பகுப்பாய்வு கூறுகிறது.
வருடாந்திர பயங்கரவாதம் மற்றும் சமாதான குறியீடுகளை உருவாக்கும் அறிவியல் அமைப்பான பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) இந்த பகுப்பாய்வினை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் ஆபத்து பதிவு மற்றும் பிற ஆதாரங்களின் தரவைப் பயன்படுத்தி எந்த பிராந்தியங்களில் அதிக ஆபத்து உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
2050-ஆம் ஆண்டு வாக்கில் உலக மக்கள்தொகை கிட்டத்தட்ட 10 பில்லியனாக உயரும், அதற்கான வளங்களை உருவாக்க அனைத்து நாடுகளும் தீவிரமாகும். இதனால் சஹாரா பகுதிகள், ஆப்பிரிக்கா நாடுகள், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் வசிக்கும் 1.2 பில்லியன் மக்கள் 2050-க்குள் இடம்பெயரவேண்டிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஆய்வு கூறுகிறது.
"இது வளரும் நாடுகளில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் பெரும் சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும், ஏனெனில் வெகுஜன இடப்பெயர்ச்சி மிகவும் வளர்ந்த நாடுகளுக்கு அதிகளவிலான அகதிகள் வருகைக்கு வழிவகுக்கும்" என்று ஐஇபி-யின் நிறுவனர் ஸ்டீவ் கில்லிலியா கூறினார்.
இந்த ஆய்வறிக்கை அச்சுறுத்தல்களை இரண்டு பரந்த பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. உணவு பாதுகாப்பின்மை, நீர் பற்றாக்குறை, மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு பிரிவாகவும் வெள்ளம், வறட்சி, சூறாவளிகள், உயரும் கடல் மட்டங்கள் மற்றும் வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் வரவிருக்கும் ஆண்டுகளில் நீர் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதில் பாகிஸ்தான், ஈரான், மொசாம்பிக், கென்யா மற்றும் மடகாஸ்கர் போன்றநாடுகள் மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவிருக்கின்றன, அத்துடன் அவற்றைச் சமாளிக்கும் திறனும் அந்நாடுகளுக்கு குறைந்து வருகின்றன. "இந்த நாடுகள் இப்போது பரவலாக நிலையான சூழலை கொண்டுள்ளன, ஆனால் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் அதிக வெளிப்படும்போதும் மிக மோசமடையும். ஏனென்றால் அந்த நாடுகளின் நேர்மறை அமைதி தொடர்ந்து மோசமடைந்து வருகிறது " என்று 90 பக்க பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது உலகில் 60% குறைவான புதிய நீர் கிடைக்கிறது என்று கில்லிலியா கூறினார், அதே நேரத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் உணவுக்கான தேவை 50% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.