2019-ம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10:24 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்படி இன்று இந்திய நேரப்படி இரவு 10: 24 மணி தொடங்கி அதிகாலை 2:14 மணி வரை சூரிய கிரகணம் நடைபெறுகிறது. மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே முழுமையான சூரிய கிரகணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவாக இருப்பதால் இந்த வானியல் அதிசயத்தை, இந்திய மக்களால் பார்க்க முடியாது.
சிலி, அர்ஜென்டினா, ஈகுவடார், பிரேசில் மற்றும் தென்பசிபிக் பெருங்கடல் அருகில் உள்ள பகுதிகளில் சூரிய கிரகணத்தை தெளிவாக காணமுடியும். சிலி நாட்டில் லா செரீனா எனும் இடத்தில், அந்நாட்டு நேரப்படி மதியம் 3:22 மணிக்கு தொடங்கி, மாலை 5:46 மணி வரை இந்த கிரகணத்தை காணமுடியும். இந்த கிரகணத்தால் தெற்கு பசிபிக் நாடுகள் சில மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைன் மூலம் கிரகணத்தை நேரலையாக கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள எக்ஸ்ப்ளோரேடோரியம் மியூசியத்தின் www.exploratorium.edu என்ற இணையதளம் வாயிலாக அனைவரும் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
இந்திய நேரப்படி விடியற்காலை 12:53 மணி முதல் முழு சூரிய கிரகணத்தின் நேரடி ஒளிபரப்பு தொடங்கும். அதுமட்டுமின்றி Solar Eclipse Timer app என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கலாம்