சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இந்தியர்கள் சிகிச்சை மேற்கொள்ள தவறுவதால் அந்நோயின் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
நீரிழிவு நோய் பாதிப்புக்கு காரணமான ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இந்தியர்களிடம் விழிப்புணர்வு இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. HbA1c எனப்படும் நீரிழிவு நோயின் தன்மையைக் கண்டறிய செய்யப்படும் ஆய்வில், ஒரு நபருக்கு 3 மாத சராசரி 6 சதவிகிதத்திற்கும் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் இல்லை என்றும் 8 சதவிகிதத்திற்கும் மேல் இருந்தால் கட்டுப்படுத்த இயலாத சர்க்கரை நோய் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக NOVA NORDISK EDUCATION FOUNDATION என்ற அமைப்பு 28 நகரங்களில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நீரிழிவு நோயாளிகளிடம் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது. அதில், மும்பைவாசிகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி HbA1c அளவு 8 புள்ளி 2 சதவிகிதமாகவும், டெல்லியில் 8 புள்ளி 8 சதவிகிதமாகவும், சென்னை மற்றும் கொல்கத்தாவில் முறையே 8.2% மற்றும் 8.1% ஆக உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நீரிழிவு நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளத் தவறியதுமே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.
2017ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 7 கோடியே 29 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததாகவும், அதில் 80 சதவிகிதம் பேர் மருத்துவ சிகிச்சை பெறவில்லை எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதவிர நீரிழிவு நோயின் தன்மை அதிகரிப்பதால் உள்உறுப்புகள் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்களில் சுமார் 66 லட்சம் பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 82 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 80 லட்சம் பேருக்கு நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 65 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு இதய நோய் ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
துரித உணவுகள், மனஅழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாதது என வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதுபோன்ற நோய்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.