சுற்றுச்சூழல்

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- நெடுஞ்சாலைகள் ஆணையம்

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- நெடுஞ்சாலைகள் ஆணையம்

Veeramani

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாரத்மாலா திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ள இந்த எட்டுவழிச்சாலையானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாகவே சுற்றுச்சூழல் அனுமதிபெற தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். நிலம் கையகப்படுத்துதலுக்கு முன்பே சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்பது, குதிரைக்கு முன்னர் வண்டியை பூட்டுவதற்கு சமம் என்றும் வாதிட்டுள்ளார் இவர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் இடையேயான, 277 கி.மீ., துார சாலையை, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழி சாலையாக மாற்றும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு, விவசாயிகள்  மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடந்தாண்டு, ஏப்., 8ல் தடை விதித்தது. இதை எதிர்த்து, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.