சுற்றுச்சூழல்

டெல்லி அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்தில் 8 சிறுத்தைகள் கண்டுபிடிப்பு

டெல்லி அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்தில் 8 சிறுத்தைகள் கண்டுபிடிப்பு

JustinDurai

டெல்லி அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்தில் எட்டு சிறுத்தைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் உள்ள அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயம், 32 கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ளது. 1940ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த சரணாலயத்தில் எங்குமே சிறுத்தைகள் இருப்பதாக கண்டறியப்படவில்லை. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டில் வனத்துறையினர் அசோலா பாட்டி சரணாலயத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான அடையாளங்களை கண்டுபிடித்தனர். இதை உறுதி செய்வதற்காக ஜூன் 2021 முதல் ஜூன் 2022 வரை டெல்லி வனம், வனவிலங்குத் துறை மற்றும் பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி இணைந்து சரணாலயத்தில் 42 இடங்களில் நவீன கேமராக்களை பொருத்தி ஆய்வு செய்து வந்தனர்.

இந்த கேமராக்களில் கழுதைப்புலிகள், காட்டுப்பூனை, பொன்னிறக் குள்ளநரி, முயல், காட்டுப்பன்றி, புல்வாய், கடமான், புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டது. அதோடு அசோலா பாட்டி சரணாலயத்தில் சிறுத்தைகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த கேமராக்களில் மொத்தம் 8 சிறுத்தைகள் பதிவாகியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்தில் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்ற சிறுத்தைகளின் எண்ணிக்கை தற்போது மெல்ல அதிகரித்து வருவதாக வெளியிடப்படும் ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.  இதன்மூலம் சரணாலயப் பகுதி வளமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று கூறும் காட்டுயிர் ஆர்வலர்கள், அசோலா பாட்டி சரணாலயத்தின் வனப்பரப்பை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: நமீபியாவில் இருந்து வந்த சீட்டாக்களின் பாதுகாப்புக்காக இரண்டு யானைகள் நியமனம்