சுற்றுச்சூழல்

இந்தியாவில் காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட 351 ஆறுகள் மாசடைந்துள்ளன: அதிரவைக்கும் புள்ளிவிவரம்

இந்தியாவில் காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட 351 ஆறுகள் மாசடைந்துள்ளன: அதிரவைக்கும் புள்ளிவிவரம்

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் உள்ள ஆறுகளில் ஏற்படும் மாசுபாட்டிற்கு காரணம் என்ன என்பது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், இந்தியாவில் நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து மட்டும் ஒரு நாளில் 72,368 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாவதாக கூறியுள்ளது. 

அந்த எழுத்துபூர்வ பதிலில், ‘குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து வெளியேறக் கூடிய வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், ஆற்று நீர்ப் பகுதிகளில் அதிக அளவில் கொட்டப்படும் திடக்கழிவுகள் ஆகியவையெல்லாம்தான் ஆறுகள் அதிகளவில் மாசடைவதற்கான காரணங்களாக இருக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பதிலின் வழியாக நமக்கு தெரியவரும் பிற தகவல்கள் இங்கே: ‘மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் நகர்புற பகுதிகளில் இருந்து மட்டும் ஒரே நாளில் 72,368 மில்லியன் லிட்டர் அளவிற்கு கழிவுநீர் உருவாகிறது. அதில் சுத்திகரிக்கக் கூடியதாக வெறும் 31,841 மில்லியன் லிட்டர் மட்டுமே இருக்கிறது. இந்த வித்தியாசத்தாலும் அதிக அளவில் ஆறுகள் மாசடைகிறது.

2018 கணக்குப்படி இந்தியாவில் ஓடக்கூடிய நதிகளில் 351 நதிகள் இதுவரை மாசு அடைந்துள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிட்ட பவானி, தாமிரபரணி ஆகிய நதிகள் பட்டியலில் உள்ளன (தமிழ்நாட்டின் இந்த நதிகள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாகவே மாசடைந்த ஆறுகளின் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது)

பிற மாநிலங்களைப் பொறுத்தவரை ஆந்திராவில் ஓடக்கூடிய துங்கபத்ரா கோதாவரி கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து நதிகளும், டெல்லியில் ஓடக்கூடிய யமுனை, உத்தரப் பிரதேசத்தில் ஓடக்கூடிய கங்கை சரயு உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய நதிகள் அனைத்துமே மாசடைந்து இருக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஓடக்கூடிய 53 நதிகளும் அசாமில் ஓடக்கூடிய 44 நதிகளும் முழுவதுமாக மாசடைந்த நதிகளாக இருக்கிறது.’

இங்கு குறிப்பிடப்பட்டிருபப்வை யாவும், பெரும் ஆறுகள் குறித்த தகவல்கள் மட்டுமே. இன்னும் குளங்கள் ஏரிகள் ஆகியவை மாசடைந்து இருப்பது குறித்த விவரங்கள் இன்னும் அதிர்ச்சி ஊட்டுவதாகவே உள்ளது.

‘தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி வந்த போதிலும் ஆறுகளும் ஏரிகளும் மாசடைவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது’ என்தையே மத்திய அரசின் இந்த பதில் வழியாக நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

அதுவும் நகர்ப்புறங்களில் வெளியேற்றக்கூடிய கழிவுகளால்தான் கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் ஆறுகளும் மாசடைகிறது என்பது கண்கூடாக தெரிகிறது. ஆறுகளும் ஏரிகளும் மாசடைவதை தடுக்க அரசு என்னமாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது என்பதை பொறுத்தே, இதன் தீர்வும் அமையும்.

- நிரஞ்சன் குமார்