காற்று மாசுபாட்டை குறைக்க ஒற்றைப்படை இரட்டைப்படை இலக்க எண் திட்டத்தை கொண்டுவர திட்டமிட்டு வருவதாக ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவிவரும் நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பியதோடு, காற்று மாசுபாட்டை குறைக்க கடும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மாநில அரசுகள் சார்பாக பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக கருத்து கூறியுள்ள ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் மாநகராட்சிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பள்ளி கல்லூரிகளை மூடுவது மற்றும் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது உள்ளிட்டவற்றையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
குறிப்பாக வாகன போக்குவரத்தை குறைக்க ஒற்றைப்படை இரட்டைப்படை இலக்க எண் திட்டத்தை ஹரியானாவில் அமல்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தின்படி கார் உள்ளிட்ட வாகனங்களின் பதிவு எண்ணின் கடைசி எண் பூஜ்ஜியம் 2 4 6 8 ஆகிய எண்களில் முடிகிறது என்றால், ஒரு மாதத்தின் 2 4 6 8 ஆகிய இரட்டைப்படை எண் வரக்கூடிய தினங்களில் மட்டும் தான் அந்த வாகனங்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.