கல்வி

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது துவங்கும்? - ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது துவங்கும்? - ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்

webteam

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும் தேதி சம்பந்தமான தகவல்கள் ஏதுமில்லை என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முடிக்க அக்டோபர் 2026 இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாது என ஆர்டிஐயில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் திட்ட மேலாண்மை நிறுவனம் இன்னும் இறுதி செய்யப்படாமலும், எப்போது தொடங்கும் என தெரியாமல் இருப்பதும் ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த பிப்ரவரி மாதம் 2015-ல் அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து ஆர்டிஐ-யில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், அக்டோபர் 2026-ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும் எனவும், கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான 1977.8 கோடியில், 82 சதவீதமான 1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைய்கா நிறுவனம் வழங்கும் எனவும், 20 சதவீதத் தொகையான 350.1 கோடியை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும் எனவும், சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் உள்பட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்து உள்ளது எனவும், அதற்காக 12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.