குரூப் IV தேர்வு பணிகள் குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கான, 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டு, அதற்கான எழுத்துத் தேர்வினை வருகிற 11.02.2018 அன்று முற்பகல் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களிலும் நடத்தவுள்ளது. இத்தேர்வுக்காக 20.8 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (செல்லான்) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.