தமிழகத்தில் மார்ச் 22-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ப்ளஸ் 2 நீங்கலாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மாநிலம் முழுவதும் 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28-ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், நீண்ட நாள்களாகவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகளை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டு, இந்த உத்தரவை தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.
அதன்படி, மறு உத்தரவு வரும்வரை மார்ச் 22-ஆம் தேதியிலிருந்து 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகளை மூட தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். பொதுத்தேர்வை கருத்தில்கொண்டு 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளி மற்றும் விடுதிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
9,10,11 வகுப்புகளுக்கு ஆன்லைன் / டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், மற்ற வாரியங்களின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.