கல்வி

’பள்ளி மாணவர்கள் இப்படி நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

’பள்ளி மாணவர்கள் இப்படி நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

சங்கீதா

பேருந்துகளின் படியில் தொங்கிக் கொண்டு செல்வதை, மாணவர்கள் ஃபேஷனாக நினைப்பது வருத்தம் ஏற்படுத்துவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில், தமிழகம் முழுவதும் புதியதாக நேரடியாக நியமனம் செய்யப்பட்ட 95 வட்டார கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பினை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பினை தொடங்கிவைத்தார். 

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: “டிஆர்பி மூலமாக தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 95 வட்டார கல்வி அலுவர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை, இன்று மதுரையில் தொடங்கிவைத்துள்ளோம். 3 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்தப் பயற்சி வகுப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 95 அலுவர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கடந்த சில நாட்களுக்கு முன் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

நீட் தேர்வு குறித்து இந்த முறை ஆளுநரை சந்தித்து, நீட் தேர்வு ரத்து குறித்து குடியரசு தலைவருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பவேண்டும் என தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். இந்த முறை கண்டிப்பாக குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் கடிதத்தை தமிழக ஆளுநர் அனுப்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளிகளில் ‘குட் டச் பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு கொடுத்துள்ளோம். ஏதேனும் நடந்தால் போக்சோ வழக்குபதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து அதிக விழிப்புணர்வு மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகல்வித்துறையில் இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் நிதி அதிகமாக அரசு ஒதுக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல தடைசெய்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்வதை குறைப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்று கூறவேண்டியுள்ளது. தங்களது குழந்தைகள் எவ்வாறு பள்ளி, கல்லூரி சென்று வருகிறது என்று ஒவ்வொரு பெற்றோரும் கவனிக்க வேண்டும்.

மாணவர்கள் மீது பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பேருந்தில் தொங்கிகொண்டு செல்வது ஃபேசனாக நினைக்கிறார்கள் மாணவர்கள். இந்த நிலையை மாற்றி கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மாணவர்களை பேருந்தில் படிக்கட்டு பயணத்தை சரிவர கவனிக்க முடியாத நிலை உள்ளது.

மாணவர்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு நேரத்தில் கிளம்பி செல்லவேண்டும். கடைசி நேரத்தில் பள்ளிக்கு செல்ல முயல்வதால், பேருந்துகளில் கூட்டமாக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. பழுதடைந்த அரசுப் பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, தமிழக பட்ஜெட்டில் ரூ.7500 கோடி நிதி ஒதுக்கி, பேராசியர் அன்பழகன் பெயரில் பள்ளிகளுக்கான மறுசீரமைப்பு பணிகளை தொடங்கவுள்ளோம். பழுதடைந்த கட்டிடங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.