கல்வி

நீட் விவகாரம்: தமிழக அரசின் முறையீட்டு மனு தள்ளுபடி!

நீட் விவகாரம்: தமிழக அரசின் முறையீட்டு மனு தள்ளுபடி!

webteam

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22 ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள் ஒதுக்கீடு மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். 
இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், அம்மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 31 ம் தேதி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்தும், 85 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அதில், ’மாநில பாட திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது மாநில அரசின் கொள்கை சார்ந்த நடவடிக்கை. இதுபோன்ற மாநில அரசின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவது அடிப்படை உரிமையை மறுக்கும் செயல். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்ற வகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, 85 சதவீத உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உத்தரவிட்டனர்.