கல்வி

விவசாயியின் மகளாக பிறந்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி - கரூர் பெண் அபிநயா சாதனை!!

விவசாயியின் மகளாக பிறந்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி - கரூர் பெண் அபிநயா சாதனை!!

kaleelrahman

கரூர் மாவட்டம் முன்னூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் - சிவகாமி தம்பதியின் மகள் அபிநயா. விவசாய குடும்பத்தில் பிறந்த அபிநயா, அரசு பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பை முடித்த பிறகு கோயம்புத்தூர் அரசு வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்.சி., அக்ரி படித்துள்ளார். பள்ளியில் படிக்கும் போதே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ள இவர், தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். அரசு பணி கிடைத்த பிறகும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தொடர்ந்து தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வில் நான்கு முறை தோல்வியடைந்த போதும் முயன்றால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு படித்துள்ளார்.

கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வை எழுதியவர், தேர்ச்சி பெற்று அக்டோபர் மாதம் நடைபெற்ற அடுத்தகட்ட தேர்விலும் தேர்ச்சி அடைந்தார், அதன்பிறகு இந்தாண்டு பிப்ரவரி மாதம் நேர்முக தேர்வை முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார், இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர், இந்திய அளவில் 559 ஆவது நபராக வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் அபிநயாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் மகளாக அபிநயா ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒரு விவசாயியின் மகளாக பிறந்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது எனக்கும், தமிழகத்திற்கும் பெருமையாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் விவசாயிகளாக உள்ளனர். ஆகவே விவசாயிகளின் எண்ணம் அறிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றுவேன் எனத்தெரிவித்தார் அபிநயா.