குரூப் - 1 தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக தரப்பட்ட புகார்களை விசாரிக்கும் படி, மாநகர காவல்துறை ஆணையருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த திருநங்கையான சுவப்னா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி நடத்திய, 'குரூப் - 1' பிரிவில், 68 பணியிடங்களுக்கான பிரதான தேர்வு, 2016 ஜூலையில் நடந்தது. அதில், முறைகேடு நடந்திருப்பதாக தனியார் 'டிவி' செய்தி வெளியிட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், விடைத்தாளை கேட்ட போது, வழங்க மறுத்து விட்டனர். தரகர்களிடம், விடைத்தாள்கள் எளிதாக கிடைக்கின்றன. அசல் விடைத்தாள் தங்களிடம் இருப்பதாக தனியார் டிவி-யும் அறிவித்தது. எனவே, 'குரூப் - 1' தேர்வை ரத்து செய்து, புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் புருஷோத்தமன், தனியார் டிவி சார்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகினர்.
தேர்வில், முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர போலீஸ் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து விசாரணையை செப்டம்பர் 11க்கும் தேதிக்கும் நீதிபதி ஒத்திவைத்தார்.