திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கழைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கழைக்கழகம் வழங்கி வரும் அனைத்து விதமான பாடப்பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு முழுக்க முழுக்க இலவசமாக கல்வி வழங்கப்படும் என்றும், எந்தவொரு பாடப்பிரிவிலும் திருநங்கை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் ஜி.ராம் ரெட்டி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் ரவீந்திர குமார் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பல்கழைக்கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், திருநங்கை சமுதாயத்தினரிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையிலும், உயர்கல்வியில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.