திருச்சி அரசு பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றிருக்கிறது. சுமார் 5 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதுடன், இந்த கல்வியாண்டிற்கான ஒன்றாம் வகுப்பில் இதுவரை சேர்க்கை பெற்றுள்ள 120 மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றிருக்கிறார்கள்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆண்டுதோறும் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பள்ளிக்கும், மாணவர்கள் கல்வி கற்க தேவையான பொருட்களை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும், தன்னார்வலர்களும் வழங்குவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால், கல்வி சீர் வழங்கும் நிகழ்வு நடைபெறவில்லை.
இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு பின் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் இன்று நடைபெற்றது. சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பீரோ, நாற்காலிகள், எழுதுப்பொருட்கள், புத்தகங்கள், மின் விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் 57 வது மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம், மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் தமிழ் செல்வன் முன்னிலையில் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் கல்வி சீராக பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க... 'மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் டிசியில் ரிமார்க்' - அமைச்சரின் கருத்தை எப்படி பார்ப்பது?
இதே நிகழ்ச்சியில் இப்பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பு சேர்ந்த 120 மாணவர்களை கெளரவிக்கும் வகையில் அந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டு பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான ஒன்றாம் வகுப்பில் மட்டும் இதுவரை 120 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிருந்தா.