கல்வி

கவலைப்படாதே... கலங்கிவிடாதே… நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை

கவலைப்படாதே... கலங்கிவிடாதே… நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை

webteam

கொரோனா பரவல் தொடங்கியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. பல்வேறு வகையான போட்டித்தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், கல்லூரி பருவத்தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டன. ஆன்லைன் தேர்வுகள், வகுப்புகள் என கல்விச்சூழலே தலைகீழாக மாறியுள்ள நிலையில், அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ தகுதித்தேர்வை தயக்கமின்றி எழுதுவற்கான உளவியல் ரீதியான எளிய ஆலோசனைகளை வழங்குகிறார் பள்ளி மாணவர்களின் மனநல ஆலோசகர் பிரீத்தி பாலாஜி.

நாம் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் தேர்வு பயத்தைக் கடந்தே வந்திருக்கிறோம். ஆனால் பயம் உருவாவதற்குக் காரணம் வெளியுலகம்தான். முதலில் பெற்றோர்களின் வலியுறுத்தல், சமூகம், சகமாணவர்களின் அழுத்தம், கடும் போட்டி, தோல்வி பற்றிய பயம், தேர்வுக்குத் தயாராகாத நிலை, பழைய தேர்வுகளில் மதிப்பெண் குறைவு போன்ற பலவற்றால் தேர்வு பற்றிய பயம் மன அழுத்தமாக மாறுகிறது.

வேறு சிறப்பான வாய்ப்புகள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ என பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடுகின்றன. பிறகு புரொபஷனல் படிப்புகளில் சேர்வதற்கான தகுதித்தேர்வுகள் என தேர்வுகள் வரிசையில் நிற்கின்றன. எந்த உந்துதலும் சிறு முயற்சியும் இல்லாமல், எந்தக் காரியத்தையும் நாம் செய்யமுடியாது. அதேபோல தேர்வாக இருந்தாலும், மனதில் உறுதியும் உழைப்பும் இருந்தால்தான் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளமுடியும். அதையே பெரும் மனஅழுத்தமாக எடுத்துக்கொண்டால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய தாழ்வுமனப்பான்மை இருந்துவருகிறது. தேர்வு எழுதமுடியுமா என்ற தயக்கத்தைப் போக்கவேண்டும். முயற்சி செய்தால் என்னாலும் முடியும் என்ற எதார்த்தமான நம்பிக்கை தேவை. பெற்றோர்களும் இதுவே கடைசி என்ற ரீதியில் பிள்ளைகளை முட்டுச்சந்தில் நிறுத்திவிடக்கூடாது. நீட் தேர்வையும் தாண்டி, வாழ்க்கையில் வேறு சிறப்பான வாய்ப்புகளும் உள்ளன என்ற புரிதலை பிள்ளைகளிடம் ஏற்படுத்தவேண்டியது கட்டாயம்.

பிரச்சினையாக மாறும் பயம்

பயம் அழுத்தமாகி பெரும் பிரச்சினையாகவும் மாறக்கூடும். மாணவர்கள் தடம் புரண்டுபோவதும், ஏதுமற்றவர்களாக உணர்வதும் நடக்கும். எனவே தேர்வுக்குத் தயாராவதை  தேர்வுக்கு முன்பு தயாராகுதல், தேர்வு எழுதுதல், தேர்வுக்குப் பிறகான நிலை என மூன்று கட்டங்களாகப் பிரித்துக்கொள்ளலாம். தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்போது, மாணவர்கள் தங்களது படிப்புக்கான  கால அட்டவணையைத் தயார் செய்துகொள்ளவேண்டும். அதை எதார்த்தமாக தயாரிக்கவேண்டும். விடியற்காலையில் 3 மணிக்கு எழுந்து படிப்பேன் என்பது மாதிரியான நடைமுறை சாத்தியமில்லாத அட்டவணையை தயாரிக்கக்கூடாது.

ஸ்மார்ட் கற்றல்முறை

நான் தொடர்ந்து 50 நிமிடங்கள் படிப்பேன். பத்து நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்வேன் என்று அவரவர் மனநிலைக்கு ஏற்ப தீர்மானித்துக்கொள்ளலாம். நேரக்கணக்கு மாறலாம். அடுத்து ஸ்மார்ட் லேர்னிங். வெறுமனே விழுந்து விழுந்து படிப்பதைவிட, முக்கியமான பாடங்களில் இருந்து கீ நோட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். மார்க்கர் பேனாவை வைத்து ஹைலைட்ஸ் செய்யலாம். முக்கிய குறிப்புகளை பின்அப் செய்யலாம். நீங்கள் படித்தவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதன் மூலம் நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.

வீட்டிலில் டெஸ்ட் எழுதிப்பார்த்து பயிற்சி செய்யலாம். சந்தேகம் வரும்போது அருகிலுள்ள ஆசிரியர்களிடம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கான சூழலை உருவாக்கித் தரவேண்டும். நல்ல சாப்பாடு, நல்ல உறக்கம் தேவையானது. பையன்தானே படிக்கிறான் என்று பெற்றோர்கள் சத்தமாக டிவி வைத்து பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. வீட்டில் உரக்கப் பேசுவதைத் தவிர்க்கலாம்.  

உங்கள் ஸ்டைலில் படியுங்கள்

தினமும் படிப்பதற்கு முன் மூச்சுப்பயிற்சி தெரிந்தால், செய்துவிட்டு படிக்கத் தொடங்கலாம். மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யக்கூடாது. உங்கள் ஸ்டைலில் படித்தால் போதும். நீங்கள் எந்தளவுக்கு படித்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அடுத்து தேர்வுநாளில் செய்யவேண்டியதில் கவனம்கொள்ள வேண்டும். மற்ற நாட்களைவிட காலையிலேயே எழுந்துவிடுங்கள். ரிலாக்ஸ் செய்துகொண்டு புறப்படுங்கள். அவசர அவசரமாகவும் பரபரப்பாகவும் தேர்வுக்குப் புறப்படாதீர்கள்.  

தேர்வு நாள் நெருங்கும்போது வெளியூர் செல்வதைத் தவிர்க்கவேண்டும். நன்றாக படித்திருக்கிறேன். தேர்வை நன்றாக எழுதுவேன். என் பெஸ்ட்டை கொடுக்கப்போகிறேன் என்ற சுய உரையாடல் தேவை. நம்பிக்கையும் அமைதியான மனநிலையும் தேர்வுநாளில் நல்ல பலனைத் தரும். பக்கத்தில் எழுதுகிறவர்களைப் பார்த்து மலைக்கவேண்டியதில்லை. உங்களுக்குத் தெரிந்த பதில்களை, படித்ததை எழுத முயற்சி செய்யவேண்டும்.

உங்கள் உழைப்பு குறைவானதல்ல

மூன்றாவது தேர்வுக்குப் பிறகான மனப்போக்கு. உங்கள் உழைப்பை குறைத்து மதிப்பிடமுடியாது. நீங்கள் படித்தது, அதற்கான சூழலை உருவாக்கிக்கொண்டது, தேர்வு எழுதியது என பல விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் முடிவுகள் அல்ல. எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெறவேண்டும். உங்களை எதற்காகவும் வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தேர்வு பற்றிய பார்வை, அடுத்த தேர்வுக்குப் பயனளிக்கும்.

மனம் விரும்பும் படிப்பு

நம்முடைய தகுதி, திறன்களுக்கு ஏற்ப படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். சமூகம் மற்றும் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விருப்பத்துக்கு மாறான படிப்பைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவல்ல. அது தேவையற்ற மனஅழுத்தத்தையே தரும். உங்கள் மனம் விரும்பும் படிப்பைத் தொடங்கும்போது, கடும் பாதையைக்கூட எளிதாகக் கடக்கும் மனவலிமை பெறுவீர்கள். முதலில் நம்மைப் பற்றிய நன்மதிப்பு மிகவும் முக்கியம்.

தேர்வுமுடிவு எதுவாகவும் இருக்கட்டும்

தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும், அதை நினைத்து வருந்துவது, எதிர்மறையாக  யோசிப்பது தேவையில்லை. மீண்டும் சிறந்த பயிற்சியை எடுத்துக்கொண்டு அடுத்த தேர்வில் வெற்றிபெற்றுவிடுவேன் என்ற தன்னம்பிக்கையே தேவை. எல்லா படிப்புகளும் உயர்ந்தவைதான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொண்டு, தங்கள் பிள்ளைகளை அணுகவேண்டும். தேர்வின் முடிவுகளை நேர்மறையாக எடுத்துக்கொள்ளும்போது, புதிய வாய்ப்புகளின் ஜன்னல்கள் திறக்கும். ஒரே தேர்வில் முடிவதில்லை வாழ்க்கை என்பதை உணர்ந்திருங்கள்.