கல்வி

7.5% ஒதுக்கீட்டில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் - நீதிபதிகள்

7.5% ஒதுக்கீட்டில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் - நீதிபதிகள்

webteam

அரசியலமைப்புச் சட்டப்படி நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை எனினும்  அவர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் 40 நாட்கள் கடந்த பின்னரும் அது குறித்து எந்த முடிவும் எடுக்க வில்லை. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிலேயே இந்த மசோதாவை நடைமுறைப்படுத்தக் கோரி, மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துகுமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் “ மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர் இணைந்து இந்த மசோதாவை உருவாக்கியிருக்கிறார்கள். இதில், கூடுதல் காலம் கேட்பது விசித்திரமானது. இது போல சூழல்கள் எழாது எனும் நம்பிக்கையின் காரணமாகவே ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கவோ, உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அப்போது பேசிய தலைமை வழக்கறிஞர் “இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளன. 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர். தலைமை செயலருடன் 5 அமைச்சர்களும் அனைத்து கோணங்களிலும் ஆலோசித்துள்ளனர். ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவைப்படுகிறது" என்றார்.

இதனைதொடர்ந்து பேசிய நீதிபதிகள் “சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். சட்ட மன்றத்தில் பல கட்ட ஆலோசனை, யோசனைகளுக்கு பிறகே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் அவகாசம் தேவையா? என கேள்வி எழுப்பினர்.

மேலும் நமது நாட்டில் சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் அதிகளவில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை. நீதிமன்ற நீதிபதிகள் பலர் ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாக தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. அது தொடர்பாக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது போல கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், " இது போன்ற முடிவுகளில், நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய தேவை ஆளுநருக்கு இல்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க போதுமான அளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என விதிகள் உள்ளன" என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள்," சூழல், அவசரம், அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டும் விரைவாக முடிவெடுக்க வேண்டும். ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடுவை விதிக்கவோ இயலாது என்பது நீதிமன்றத்திற்கு தெரியும். ஆனால் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வது அவசியமானது என நீதிமன்றம் கருதுகிறது. நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் அவர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்.

இதில் தாமதமாவது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் சேர்க்கையையும் தாமதப்படுத்தும் என தெரிவித்தனர். தொடர்ந்து,பிற மாநிலங்களில் நீட் முடிவு வெளியான பின்னர் என்ன நிலை உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில்," கர்நாடகாவில் மருத்துவ இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது" என தெரிவித்தார். அதனை உறுதி செய்து தகவல் தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.