ஹைதராபாத்தில் வைரத்தைத் தேடி விலங்கியல் பூங்காவின் சிங்கக் குகைக்குள் குதிக்க முயன்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் பூங்காவிலுள்ள ஆப்பிரிக்க இன சிங்கக்குகைக்குள் நுழைய முயன்ற நபரை பூங்கா ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை பகதூர்புரா போலீசாரிடம் பூங்கா நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். விசாரித்ததில் அந்த நபரின் பெயர் சாய்குமார்(31) என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. குகையின் மேற்பகுதியில் உள்ள சறுக்காலான பாறை வழியாக அந்த நபர் இறங்க முயற்சிப்பதும், சிங்கம் அவரைப் பார்த்து அமர்ந்திருப்பதும், பின்னர் பூங்கா ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்படுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. மதியம் 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து பகதூர்புரா காவல்நிலைய அதிகாரி துர்கா கூறுகையில், அந்த நபரிடம் விசாரித்ததில் சிங்கக்குகைக்குள் வைரம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை எடுக்கச்சென்றதாகவும் கூறியதாக தெரிவித்தார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், வீட்டிற்குச் சென்றே நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாகவும், இதுகுறித்து அவருடைய பெற்றோரிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். அவரிடம் விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், இதுவரை வழக்குப்பதியப்படவில்லை என்றும் தெரிகிறது.