மகாராஷ்டிராவில் வீட்டில் சூனியம் வைத்திருப்பதாகவும், அதை தான் எடுத்துவிடுவதாகவும் கூறி ரூ.7 லட்சம் பணத்தை ஏமாற்றி வாங்கிய பெண் ஜோதிடரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சின்ச்வாத் பகுதியைச் சேர்ந்த 52 வயது என்ஜினீயர் ஒருவர் பன்னாட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவி வகித்துவருகிறார். ஜோதிடம், மந்திரம் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கையுள்ள என்ஜினீயரின் குடும்பம் வேறு இடத்திலுள்ள ஒரு பெண் ஜோதிடரை ஆன்லைனில் சந்தித்திருக்கின்றனர். ஜோதிடரின் பேச்சில் மயங்கிப்போன குடும்பம் அவரிடம் தங்களுடைய குடும்ப கஷ்டங்களை கொட்டித் தீர்த்திருக்கின்றனர்.
வசதி படைத்த என்ஜினீயரின் குடும்பம் வீட்டிலுள்ள பிரச்னைகளை தீர்க்க செலவு செய்ய தயாராக இருப்பதை புரிந்துகொண்ட பெண் ஜோதிடர், அவருடைய வீட்டிற்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாகவும், அதனால்தான் வீட்டில் பிரச்னைகள் எழுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தான் சொல்லும் பரிகாரங்களையெல்லாம் செய்யாவிட்டால் வீட்டில் யாரேனும் இறந்துவிடுவர் என்றும் பயமுறுத்தி இருக்கிறார்.
ஜோதிடரின் பய வலையில் சிக்கி அவரின் பேச்சை முழுமையாக நம்பிய என்ஜினீயர் குடும்பம் ஆன்லைனில் அவர் சொன்ன பரிகாரங்களையெல்லாம் ஆஃப்லைனில் செய்திருக்கின்றனர். மேலும், சூனியத்தை எடுக்க அவர் கேட்ட பணத்தையும் அனுப்பியிருக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி என பல தவணைகளாக ரூ.7.21 லட்சம் பணத்தையும் அனுப்பியிருக்கின்றனர்.
பணத்தை பெற்றுக்கொண்ட பெண் ஜோதிடர் முழு பரிகாரத்தையும் கூறாமல் என்ஜினீயர் குடும்பத்தின் தொடர்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகு தான் தங்கள் குடும்பமே முழுமையாக நம்பிய பெண் ஜோதிடர் போலி என்று தெரியவந்திருக்கிறது.
பணத்தை இழந்து நொந்துபோன என்ஜினீயர் இதுகுறித்து சின்ச்வாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மகாராஷ்டிரா தடுப்பு மற்றும் மனித தியாகம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் மந்திரவாத தடுப்பு சட்டம், 2013 மற்றும் இந்திய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி பெண் ஜோதிடரை வலைவீசி தேடிவருகின்றனர்.