விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் செல்போன்கள் சைபர் கிரைம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
விருதுநகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டி அவரது நண்பர்களும், பள்ளி மாணவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனையும் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த 6 மாதமாக யார் யாரெல்லாம் அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர் என்பது குறித்த ஆடியோ பதிவுகளையும் சேகரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள 8 பேரை தவிர வேறு யாரேனும் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கைதான ஜுனைத் அகமது, பிரவீன், ஹரிஹரன், மாடசாமி ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி விநோதினி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.