குற்றம்

பறக்கும் ரயிலில் தொங்கியபடி அபாயகரமாக பயணித்த இளைஞர்கள்! வைரல் வீடியோவுக்கு போலீஸ் பதில்!

பறக்கும் ரயிலில் தொங்கியபடி அபாயகரமாக பயணித்த இளைஞர்கள்! வைரல் வீடியோவுக்கு போலீஸ் பதில்!

webteam

சிந்தாதிரிபேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் பறக்கும் ரயிலில் இளைஞர்கள் வெளியே தொங்கி கொண்டு அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களாகவே, பேருந்துகள் மற்றும் ரயில்களில் இளைஞர்கள் சிலர் கத்தி மற்றும் ஆயுதங்கள் வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்தவகையில் சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலில், இளைஞர் சிலர், ரயிலின் பெயர் பலகை மேல் ஏறி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் இளைஞர்கள் சிலபேர் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய வழித்தடத்தில், ரயில் மேல் ஏறிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ரயிலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர்களை ரயில்வே போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை முழுவதும் பாலத்தின் மேல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதில் ரயில் மேல் ஏறி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களின் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்த நிலையில், அதற்கு சென்னை காவல்துரை பதிலளித்துள்ளது. அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையினர், ரயில்வே போலீஸை டேக் செய்து, அவர்கள் இதற்கு வழிசெய்ய அறிவுறுத்தியிருந்தனர். அதற்கு அவர்கள், ‘உங்கள் செய்தியை நாங்கள் பெற்றுள்ளோம், இந்த செய்தியை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்புவோம், உடனடியாக நடவடிக்கை எடுப்போம். நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளனர். விரைவில் இந்த இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.