ஈரோடு அருகே குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடியதாக பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய கில்பர்ட். இவர், தனது மனைவி ஆரோக்கிய ஜெனிபர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் இவர், கடந்த 17 ஆம் தேதி தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் தங்க நகை திருடுபோனதாக பெருந்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆரோக்கிய ஜெனிபர் வீட்டின் அருகில் வசிக்கும் கோமதி என்பவர் ஆரோக்கிய ஜெனிபரின் குழந்தையை கொஞ்சுவது போல நடித்து பீரோவில் இருந்த நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கோமதி மற்றும் நகையை அடகு வைக்க உதவிய சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட 5 பவுன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.