குற்றம்

கடற்கரையில் காத்துவாங்கிய காதலர்களுக்கு மிரட்டல் - போன்பே மூலம் பணம் பறிப்பு

கடற்கரையில் காத்துவாங்கிய காதலர்களுக்கு மிரட்டல் - போன்பே மூலம் பணம் பறிப்பு

webteam

கடற்கரையில் அமர்ந்திருந்த காதல் ஜோடியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி போன்-பே மூலம் 40 ஆயிரத்தை பறித்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (25), இவர் கடந்த 14ஆம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் தனது தோழியை அழைத்துக் கொண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பெரிய நீலாங்கரை குப்பம் பகுதிக்குச் சென்றுள்ளார். இதையடுத்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னுடன் வந்த காதலியுடன் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், காதல் ஜோடியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களது இரண்டு பேக்குகளையும் பிடுங்கி அதில் பணம் இருக்கிறதா என தேடிப் பார்த்துள்ளனர். அதில், பணம் ஏதும் இல்லாத நிலையில், செல்போனை பிடிங்கி போன்-பே மூலம் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து முகமது உசேன் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போன் பே மூலம் பணம் அனுப்பிய விவரங்களை சேகரித்து பள்ளிகரணையைச் சேர்ந்த ஊசி உதயா (எ) உதயகுமார் (25), விக்னேஷ் (27), ஆகிய இருவரை கைது செய்த நீலாங்கரை தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.