குற்றம்

கிரெடிட் கார்டு போனஸ் தருவதாக ரூ.87 ஆயிரம் அபேஸ்! துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசார்

கிரெடிட் கார்டு போனஸ் தருவதாக ரூ.87 ஆயிரம் அபேஸ்! துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசார்

webteam

கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணம் இழந்தவருக்கு அவரது பணம் ரூ.57,081/- மீட்கப்பட்டு புகார்தாரரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

சென்னை, புதுப்பேட்டை, கொய்யாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வரபிரசாத். இவர் SBI, Induslnd மற்றும் City Bank ஆகிய வங்கிகளில் இருந்து நான்கு கிரெடிட் கார்டு வைத்துள்ளார். இவருக்கு கடந்த 18 ஆம் தேதி அன்று செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர், தான் வங்கியின் மேலாளர் என்றும் தங்களின் கிரெடிட் கார்டுகளின் விபரங்களை கூறினால் போனஸ் பாயிண்ட் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை உண்மையென நம்பிய வரபிரசாத் தனது நான்கு கிரெடிட் கார்டுகளின் விபரங்களையும் மற்றும் OTP எண்ணையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் வரபிரசாதின் நான்கு கிரெடிட் கார்டுகளின் வங்கி கணக்கிலிருந்து மொத்தம் பணம் ரூ. 87,631/- ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக எடுக்கப்படுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதுகுறித்து வரபிரசாத் திருவல்லிகேணி சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில் F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திருவல்லிகேணி சைபர் கிரைம் காவல் குழுவினர் துரிதமாக செயல்பட்டு விசாரணை செய்ததில் அடையாளம் தெரியாத நபர் புகார்தாரரின் கிரெடிட் கார்டிலிருந்து ஆன்லைன் மூலம் Paytm மற்றும் Mobikwik -ல் பண பரிவர்த்தனை செய்துள்ளது தெரியவந்தது. உடனே, மேற்படி திருவல்லிகேணி சைபர் கிரைம் காவல் குழுவினர் இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு, வரபிரசாத்தின் பணத்தை மீள திருப்பி கொடுக்கும்படி, விதிகளுக்குட்பட்டு பரிந்துரை கடிதம் அனுப்பினர்.

அதன் பேரில் வங்கி நிர்வாகத்தினர், வரபிரசாத்தின் வங்கி கணக்கிற்கு பணம் ரூ.57,081/-ஐ மீள திரும்ப செலுத்தினர். மேலும் மீதமுள்ள பணத்தை மீட்க திருவல்லிகேணி சைபர் கிரைம் காவல் குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மகிழ்ச்சியடைந்த வரபிரசாத் சென்னை பெருநகர சைபர் குற்றப்பிரிவு திருவல்லிகேணி காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.