குற்றம்

அடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது

அடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது

webteam

சென்னை வண்ணாரப்பேட்டையில் அடகுக்கடை உரிமையாளர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தோஷ் என்பவர் வீட்டில் கள்ளச்சாவி போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொருக்குப்பேட்டை காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். 

கள்ளச்சாவி போட்டு வீடு திறக்கப்பட்டிருந்ததாலும், வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான சில காட்சிகள் அழிக்கப்பட்டு இருந்ததாலும், சந்தோஷ் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபருக்கு கொள்ளையில் தொடர்பிருக்கலாம் என காவலர்கள் சந்தேகித்தனர். மற்றொருபுறம் கொள்ளை நடந்தது உண்மைதானா? அல்லது வருமானவரி ஏய்ப்புக்காக நடத்தப்பட்ட நாடகமா? என்றும் விசாரணை நடைபெற்றது. 

இந்த நிலையில், சந்தோஷிடம் பணியாற்றிய ஹன்ஸ்ராஜ் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஹன்ஸ்ராஜ் மற்றும் கூட்டாளிகள் ரயில் மூலம் ஆந்திரா தப்பிச் செல்வதை அறிந்த காவலர்கள், அம்மாநில காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, விஜயவாடா ரயில் நிலையத்தில் வைத்து ஹன்ஸ்ராஜ் உள்பட 3 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ தங்கம், 110 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.