குற்றம்

பைக் ஸ்டிக்கரால் துப்பு துலங்கியது; போலீசிடம் வசமாக சிக்கிய கொள்ளையர்கள்!

பைக் ஸ்டிக்கரால் துப்பு துலங்கியது; போலீசிடம் வசமாக சிக்கிய கொள்ளையர்கள்!

JustinDurai

திருட்டு பைக்கில் இருந்த ஸ்டிக்கரை சரியாக கிழிக்காததால் போலீசிடம் சிக்கியுள்ளனர் இரு கொள்ளையர்கள்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் செளந்தரராஜன் (35). இவர் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி தனது சொந்த ஊரான ஆரணிக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் செளந்தராஜனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டிலிருந்த 24 இன்ச் டிவி, 2 கிராம் தங்க நகை, சிலிண்டர், மடிக்கணினி, இருசக்கர வாகனம் ஆகியவை கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ந்தார். 

இது குறித்து செளந்தரராஜன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர். நிகழ்விடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் குமரன் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த மதன் என்பவரை விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பைக்கை சோதனை செய்தபோது, முகப்பு பகுதியில் இருந்த ஒரு ஸ்டிக்கரை கிழித்துவிட்டு வேறொரு ஸ்டிக்கர் ஒட்டியிருந்த தடமிருந்தது. 

இதையடுத்து வீட்டில் திருட்டு போனது குறித்து புகார் கொடுத்த செளந்தரராஜனை வரவழைத்து பைக்கை காட்டியபோது, திருடுபோன தனது பைக்தான் இது என உறுதிப்படுத்தினார். மேலும் வாகன எண்ணையும் மாற்றியிருப்பது தெரியவந்தது.

பின்னர் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்ட மதன் (29) மற்றும் ராகுல் (23) ஆகிய இருவரிடமிருந்து  டிவி, தங்க நகை, வெள்ளி பொருட்கள், மடிக்கணினி, சிலிண்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.